விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீசார் நிபந்தனை! குடியரசு தின விழாவுக்கு இடையூறு கூடாது

தினமலர்  தினமலர்
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீசார் நிபந்தனை! குடியரசு தின விழாவுக்கு இடையூறு கூடாது

புதுடில்லி: டில்லியில், நாளை டிராக்டர் பேரணி நடத்த, விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதேநேரத்தில், குடியரசு தின விழா அணிவகுப்புக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதத்தை தவிர்க்க, டில்லி முழுதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.'குடியரசு தினத்தன்று, டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்' என, விவசாய சங்கங்கள் அறிவித்தன.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'இது சட்டம் - ஒழுங்கு பிரச்னை. பேரணிக்கு அனுமதி கொடுப்பது குறித்து, டில்லி போலீஸ்தான் முடிவு எடுக்க வேண்டும்' என, கூறியது.இதையடுத்து, டில்லி, ஹரியானா, உத்தர பிரதேச போலீசாருடன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். விவசாயிகள் பேரணிக்கு, நிபந்தனைகளுடன் அனுமதி அளிப்பதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பேரணிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.இது குறித்து, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளதாவது:போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின், 2.5 லட்சம் டிராக்டர்கள் ஏற்கனவே டில்லி எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணியில் பங்கேற்கவுள்ளன. பேரணியை ஒழுங்குபடுத்த, 2,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரணியை அமைதியாக நடத்துவோம். இதற்காக, கண்காணிப்பு அறையையும் திறந்து உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு, டில்லியின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், குடியரசு தின விழா நடக்கும் பகுதி வழியாக பேரணி நடத்த அனுமதி தரப்படாது. குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த பின் தான், டிராக்டர் பேரணி நடத்த வேண்டும். அணிவகுப்புக்கும், குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கும், விவசாயிகள் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.

பேரணி முடிந்ததும், அமைதியாக கலைந்து செல்ல வேண்டும். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், டில்லி முழுதும் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே, விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க, பாகிஸ்தானில், கடந்த 13 முதல், 18ம் தேதி வரை, 300க்கும் மேற்பட்ட, 'டுவிட்டர்' கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொய் சொல்ல சொன்னது யார்?

டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள், நேற்று முன்தினம் பேட்டி அளித்தனர். அப்போது, 'டிராக்டர் பேரணியை சீர்குலைக்கவும், நான்கு முக்கிய விவசாய சங்கத் தலைவர்களை கொல்லவும் சதி நடக்கிறது. அதற்காக அனுப்பப்பட்டவரை பிடித்துள்ளோம். போலீசாரிடம் அவரை ஒப்படைக்க உள்ளோம்' என, கூறினர்.

இது குறித்து, ஹரியானா போலீசார் கூறியுள்ளதாவது:அந்த நபர், சில தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கின்போது வேலையை இழந்துள்ளார். பொழுதுபோகாமல், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். அங்கு சிலர், பெண்களை கிண்டல் செய்து உள்ளனர். அதை தட்டிக் கேட்டுள்ளார்.

இதையடுத்து, போராட்டத்தை சீர்குலைக்க முயன்றதாகவும், தலைவர்களை கொல்ல வந்ததாகவும், பொய்யாக அவர் மீது குற்றம்சாட்டினர்.போலீசார் விசாரித்தால், அந்த பொய்யையே கூற வேண்டும் என்றும் மிரட்டப்பட்டுள்ளார். யார், எதற்காக இதை செய்துள்ளனர் என்பதை விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, போலீசார் கூறியுள்ளனர்.

மும்பையில் பேரணி

மஹாராஷ்டிராவின், 21 மாவட்டங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான விவசாயிகள், நாசிக் எல்லையில் குவிந்துள்ளனர். தலைநகர் மும்பையில், நாளை நடக்கும் பேரணியில் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்தப் பேரணியில், 15 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக, விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், இந்தப் பேரணியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை