மக்கள் குறைதீர் பெட்டியுடன் 234 தொகுதிக்கும் செல்கிறார் ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
மக்கள் குறைதீர் பெட்டியுடன் 234 தொகுதிக்கும் செல்கிறார் ஸ்டாலின்

மக்கள் குறை தீர்க்கும் பெட்டியுடன், சட்டசபை தொகுதி வாரியாக சென்று, பொதுக் கூட்டங்களில் பங்கேற்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று, அவர் வெளியிடுவார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் துவக்கி உள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டங்களை, ஸ்டாலின் நடத்தி முடித்துள்ளார். இந்நிலையில், நகரப்பகுதி மற்றும் கிராமப்புறமக்களிடம் எளிதாக பிரசாரம் சென்றடையும் வகையில், பொதுக்கூட்டங்களில், ஸ்டாலின் மட்டும் தனியாக நின்று பேசும் பிரசார வியூக திட்டம், 'ஐபேக்' தரப்பில் இருந்து வகுத்து தரப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு புதிய லோகோவும், தலைப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் பேசும் பொதுக் கூட்டத்தில், தொகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் பெட்டி வைக்கப்பட உள்ளது.அப்பெட்டியில், மக்கள் தங்கள் குறைகளை எழுதி போடலாம். அக்கடிதத்தின் கோரிக்கையை, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சி அமைந்த பின், ௧௦௦ நாட்களில் நிறைவேற்றி தரப்படும் என, ஸ்டாலின் வாக்குறுதி அளிக்க உள்ளார்.

இதற்கான முதல் பொதுக்கூட்டம், திருவண்ணாமலையில் நடக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, இன்று காலை, ௧௧:௦௦ மணிக்கு, ஸ்டாலின்வெளியிடுகிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயியாக அடுத்த நடிப்பு

புதிய வேளாண் சட்ட மசோதாக்களை வாபஸ் பெறக் கோரி, டில்லி எல்லையில் முற்றுகை போாரட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், குடியரசு தினமான நாளை, டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி கட்சிகளும், களத்தில் குதிக்கின்றன. சென்னையில் நாளை நடக்கும் போராட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அப்போது, பச்சை துண்டு அணிந்து, விவசாயி வேடத்தில் டிராக்டர் ஓட்ட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -

மூலக்கதை