தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு

தினகரன்  தினகரன்
தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு

டெல்லி: தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால் அம்மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மே 5-ம் தேதி பள்ளிகளில் பொதுத்தேர்வு தொடங்குவதால் அதற்கு முன்பாக ஏப்ரல் மாதத்திலேயே தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் முழு கூட்டம் பிப்ரவரி 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் அந்த கூட்டத்தில் தேர்தல் தேதி குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளதால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தேசிய வாக்காளர் தினமான நாளை மின்னணு வாக்காளர் அட்டையை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை செல்போன் அல்லது கம்யூட்டர்களில் சேமித்து கொள்ளலாம் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை