டெல்லியில் சிகிச்சை பெற்றுவரும் லாலு பிரசாத் கவலைக்கிடம்: மகன் தேஜஷ்வி தகவல்

தினகரன்  தினகரன்
டெல்லியில் சிகிச்சை பெற்றுவரும் லாலு பிரசாத் கவலைக்கிடம்: மகன் தேஜஷ்வி தகவல்

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் தேஜஷ்வி தெரிவித்தார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்துக்கு (72) பல்வேறு உடல் உபாதைகள் உள்ளன. இதனால் அவர் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறலாலும் நிமோனியா காய்ச்சலாலும் அவதிப்பட்ட நிலையில் லாலுவின் உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம், ராஞ்சியிலிருந்து டெல்லி கொண்டு வரப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் முன், ராஞ்சி ரிம்சில் லாலுவின் முதல் மகள் மிசா பாரதி, மகன்கள் தேஜஷ்வி மற்றும் தேஜ் பிரதாப் மற்றும் மனைவி ரப்ரி தேவி ஆகியோர் அவரை சந்தித்தனர். அப்போது அவரது சிறுநீரகம் செயலிழந்து 25 சதவீதம் அளவிற்கே வேலை செய்ததாக மருத்துவர்கள் லாலு குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து லாலுவின் மகனும் பீகார் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான தேஜஷ்வி யாதவ் கூறுகையில், ‘தந்தையின் (லாலு) உடல்நிலை கவலை தரும் வகையில் உள்ளது’ என்றார்.

மூலக்கதை