தேசிய கொடியுடன் நடந்தது... * வாஷிங்டன் சுந்தர் பெருமிதம் | ஜனவரி 24, 2021

தினமலர்  தினமலர்
தேசிய கொடியுடன் நடந்தது... * வாஷிங்டன் சுந்தர் பெருமிதம் | ஜனவரி 24, 2021

சென்னை: ‘‘பிரிஸ்பேன் மைதானத்தில் தேசியக் கொடியுடன் நடந்த தருணத்தை  விவரிக்க வார்த்தைகளே இல்லை,’’ என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்தார். 

இந்திய அணி சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 21. கடந்த  2017 க்குப் பின் முதல் தர போட்டிகளில் பங்கேற்காத இவர் ஆஸ்திரேலிய  அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல்  இன்னிங்சில் 62 ரன்கள் எடுத்த வாஷிங்டன், ஷர்துல் தாகூருடன் இணைந்து  123 ரன்கள் சேர்த்தார். இரண்டாவது இன்னிங்சில் வேகமாக 22 ரன்கள்  எடுத்தார். தவிர பவுலிங்கில் 4 விக்கெட் சாய்த்தார். இந்திய அணியின்  வெற்றிக்கு இவரது ‘ஆல் ரவுண்டு’ திறமை பெரிதும் உதவியது. 

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் பங்கேற்கும்  இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இதனால் பிப். 5ல் துவங்கும் சென்னை  டெஸ்டில் அஷ்வினுடன் சேர்ந்து களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறியது:

பிரிஸ்பேன் டெஸ்ட் முதல் நாளில் ஆடுகளம் சுழலுக்கு சற்றும்  கைகொடுக்கவில்லை. இருப்பினும் ஸ்மித்தை எனது முதல் விக்கெட்டாக  சாய்த்தது, கனவு நனவானது போல இருந்தது.  இதேபோல முதல் இன்னிங்சில் ஷர்துல் தாகூர்  சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். கடைசி நாளில் நான்  பேட்டிங் செய்த போது, மறுபக்கம் பன்ட் இருந்தார். இதனால் பவுலர்கள்  நெருக்கடியில் தான் இருந்தனர். 25 அல்லது 30 ரன்கள் விரைவாக எடுத்து  விட்டால், இலக்கை அடைய எளிதாக இருக்கும் என திட்டமிட்டு  விளையாடினோம். கடைசியில் இந்திய அணி வெற்றி பெற்றதும், தேசியக் கொடியுடன்  பிரிஸ்பேன் மைதானத்தை சுற்றி வந்த அந்த தருணத்தை விவரிக்க  வார்த்தைகளே இல்லை. 

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் துவக்க வீரராக  களமிறங்க வாய்ப்பு  கிடைத்தால் அது எனது அதிர்ஷ்டமாகத் தான் இருக்கும். நமது  பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டெஸ்டில் சாதித்தது போல, நானும் அந்த  சவாலை ஏற்றுக் கொள்வேன் என நினைக்கிறேன். ஏனெனில்,  நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக  அறிமுகம் ஆனது, நான்கு விக்கெட் சாய்த்தது, 10வது இடத்தில் களமிறங்கி  பேட்டிங் செய்தது போன்ற தனது பல்வேறு சிறப்பான தருணங்களை  எங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் ரவி சாஸ்திரி. 

தவிர அந்த இடத்தில் இருந்து டெஸ்டில் துவக்க வீரராக மாறியது, உலகின்  சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட அனுபவங்களை  தெரிவித்துள்ளார். அவரைப் போல நானும் துவக்க வீரராக களமிறங்குவதை  விரும்புகிறேன். இளம் வீரராக டெஸ்டில் களமிறங்கிய போது கேப்டன்  கோஹ்லி, ரோகித் சர்மா, ரகானே, அஷ்வின் என பல சிறப்பான வீரர்களை  ‘ரோல் மாடலாக’ கண்டேன். இவர்கள் எப்போதும் நமக்கு ‘அட்வைஸ்’  செய்யத் தயாராக உள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

 

வீட்டில் கிரிக்கெட் இல்லை

இங்கிலாந்து தொடருக்காக மீண்டும் கொரோனா பாதுகாப்பு  வளையத்துக்குள் செல்ல உள்ளார் வாஷிங்டன். இதற்கு முன் அம்மா  சமைத்த சுவையான சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு மகிழ்கிறார். இவரது  மூத்த சகோதரி  ைஷலஜாவும் கிரிக்கெட் வீராங்கனை தான். இருப்பினும்  தங்களுக்குள் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை அதிகமாக பகிர்ந்து  கொள்வதில்லை. 

வாஷிங்டன் கூறுகையில்,‘‘ைஷலஜா தரும் ‘டிப்ஸ்’ மதிப்பு மிக்கதாக  இருக்கும். எனினும் வீட்டில் நாங்கள் கிரிக்கெட் குறித்து விவாதிப்பது  இல்லை. வீடு என்று வரும் போது கிரிக்கெட் தவிர பேசுவதற்கு பல்வேறு  விஷயங்கள் உள்ளன,’’ என்றார்.

மூலக்கதை