ஜோ ரூட் அசத்தல் சதம்: மீண்டது இங்கிலாந்து அணி | ஜனவரி 24, 2021

தினமலர்  தினமலர்
ஜோ ரூட் அசத்தல் சதம்: மீண்டது இங்கிலாந்து அணி | ஜனவரி 24, 2021

காலே: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் கேப்டன் ஜோ ரூட் சதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.

இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 381 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 98 ரன் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் (24), ஜோ ரூட் (67) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு லசித் எம்புல்டேனியா தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ஜானி பேர்ஸ்டோவ் (28), டான் லாரன்ஸ் (3) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய ஜாஸ் பட்லர் (55) அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் தனது 19வது சதம் விளாசினார். தொடர்ந்து அசத்திய எம்புல்டேனியா பந்தில் சாம் கர்ரான் (13), டாம் பெஸ் (32), மார்க் உட் (1) அவுட்டாகினர். ஜோ ரூட் (186) ‘ரன்–அவுட்’ ஆனார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்து, 42 ரன் பின்தங்கி இருந்தது. இலங்கை சார்பில் எம்புல்டேனியா 7 விக்கெட் சாய்த்தார்.

 

காலே டெஸ்டில் 186 ரன் விளாசிய ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் ஜெப் பாய்காட் (8114 ரன்கள்), கெவின் பீட்டர்சன் (8181), டேவிட் கோவர் (8231) ஆகியோரை முந்தி 4வது இடம் பிடித்தார். இதுவரை இவர், 99 டெஸ்டில், 19 சதம், 49 அரைசதம் உட்பட 8238 ரன்கள் எடுத்துள்ளார்.

முதல் மூன்று இடங்களில் அலெஸ்டர் குக் (12,472 ரன்கள்), கிரஹாம் கூச் (8900), அலெக் ஸ்டீவர்ட் (8463) உள்ளனர்.

மூலக்கதை