சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு மறுப்பு பிப்.1 முதல் வழக்கமான ரயில் சேவை துவங்காது: ரயில்வே வாரியம் விளக்கம்

தினகரன்  தினகரன்
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு மறுப்பு பிப்.1 முதல் வழக்கமான ரயில் சேவை துவங்காது: ரயில்வே வாரியம் விளக்கம்

புதுடெல்லி:  வருகிற ஒன்றாம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியை நம்ப வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ரயில் சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ரயில் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இந்த செய்தியை ரயில்வே அமைச்சகம் மறுத்து விட்டது. இதுபோன்ற செய்திகள் மக்களை தவறாக வழிநடத்தும் என்றும், இது அனைத்தும் உண்மைகளை அடிப்படையாக கொண்ட செய்தி இல்லை என்றும் அறிவுறுத்தி இருந்தது. தற்போது, நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்து இருப்பது போன்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு ரயில்வே அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, அவை தவறான செய்தி என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “நாட்டில் நிலவி வரும் சூழல் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிடமும் கலந்து ஆலோசனை செய்த பின்னரே வழக்கமான ரயில் சேவை தொடங்கப்படும். ரயில் பயணிகள் சமூக வலைதங்களில் வரும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம்,” என்றனர். அதேபோல் பத்திரிக்கை தகவல் பணியகமும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வழக்கமான ரயில்சேவை தொடங்குவது குறித்த செய்தி பொய் என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. வழக்கமான ரயில்சேவை தொடங்கப்படாவிட்டாலும், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டத்தை குறைக்கும் வகையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. 

மூலக்கதை