பாமகவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் விலகல்?.. தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடாததால் அதிருப்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாமகவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் விலகல்?.. தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடாததால் அதிருப்தி

சென்னை: ‘தேவேந்திரகுல வேளாளர்’ கோரிக்கை நிறைவேற்றாததால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் இந்த கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் புதிய தமிழகம் உள்ளது. இன்னும் 3 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பட்டியல் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், வாதிரியார், தேவேந்திரகுலத்தார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அனைத்துப் பெயர்களுமே ‘தேவேந்திரகுல வேளாளர்’ எனும் பொதுப் பெயரைக் குறிப்பதே ஆகும்.

எனவே “தேவேந்திரகுல வேளாளர்” என அரசாணை பிறப்பிக்கவும், பட்டியிலினத்திலிருந்து விடுவித்து இதர பிற்படுத்தப்பட்டோரில் சேர்க்கவும் புதிய தமிழகம் கட்சி கோரிக்கை வைத்தது.

சட்டமன்ற தேர்தல் பிரசாரம் துவங்குவதற்கு முன் இதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். ஆனால் தமிழக அரசு அரசாணை வெளியிடாமல், இதுபற்றி ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இது புதிய தமிழகம் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடாமல், முதல்வர் தேர்தல் பிரசாரம் துவக்கியது ஏற்புடையதல்ல என்று மதுரையில் நடந்த கூட்டத்தில் கிருஷ்ணசாமி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில், கிருஷ்ணசாமி நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில், நமது கோரிக்கையை ஏற்காத, நம்மை மதிக்காத அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம், சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடும் முடிவையே கிருஷ்ணசாமி எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி புதிய தமிழகம் கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘எங்கள் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தனித்தே போட்டியிடலாம் என அனைத்து மாவட்ட செயலாளர்களும் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் வலியுறுத்தினர்.

ஆனால் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கூட்டம் நடத்தி, கருத்துக்களை கேட்டு முடிவு எடுப்போம் என்று கிருஷ்ணசாமி கூறி உள்ளார்.

அதன்படி, பிப்ரவரியில் இருந்து சட்டமன்ற தொகுதிவாரியாக கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் முடிந்தபின், கூட்டணியில் தொடர்வதா, இல்லையா என்பதை கிருஷ்ணசாமி அறிவிப்பார்’’ என்றனர். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்தை தக்க வைக்க பாஜ முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த கட்சியின் ஓபிசி பிரிவு தேசிய தலைவர் கே. என். லட்சுமணன், மாநில தலைவர் லோகநாதன் ஆகியோர் கிருஷ்ணசாமியை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், புதிய தமிழகம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக ஏற்கனவே கோரிக்கை வைத்தது.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் பாமக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி முடிவு எடுக்க நாளை பாமக நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது.

இதில் கூட்டணியில் இருந்து விலகல் முடிவு எடுக்கப்படும் என்றே தெரிகிறது.

பாமக, புதிய தமிழகம் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகினால், அது அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அந்த கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதவிர கூட்டணியில் உள்ள மற்றொரு முக்கிய கட்சியான தேமுதிகவும், அதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

கடந்த மக்களவை தேர்தலுக்குபின், அதிமுகவிடம் அந்த கட்சி ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது. அதை அதிமுக நிராகரித்து விட்டது.

அதேசமயம் பாமக, தமாகாவுக்கு தலா ஒரு ராஜ்யசபா சீட்டை அதிமுக வழங்கியது.

இதனால் ஏமாற்றமடைந்த தேமுதிக, இந்த தேர்தல் அதிமுகவுக்கு தான் முக்கியம்.

எங்களுக்கு இல்லை. சட்டமன்ற தேர்தலில் நாங்கள் கேட்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என்று  மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அதிமுக தலைவர்கள் கூட்டணி கட்சிகளை சமாளிக்க முடியாமல் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

.

மூலக்கதை