நோய்வாய்ப்பட்ட எஜமானரை தேடிய நாய்; மருத்துவமனை வாயிலில் தவம் கிடந்து நன்றி!

தினமலர்  தினமலர்
நோய்வாய்ப்பட்ட எஜமானரை தேடிய நாய்; மருத்துவமனை வாயிலில் தவம் கிடந்து நன்றி!

அன்காரா: துருக்கியில் தன் எஜமானர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு, அவரது நாய் காத்திருந்த காட்சி வைரலாகியுள்ளது.
துருக்கியின் டிராப்ஸன் பகுதியை சேர்ந்த செமல் செண்டுர்க் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரது வளர்ப்பு நாயான போன்குக், ஆம்புலன்சின் பின்னாலேயே ஓடி வந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை காண மருத்துவமனையின் வாசலிலேயே செல்ல நாய் காத்திருந்துள்ளது. தன் எஜமானர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை தினமும், வாசலில் செமல் வருகைக்காக காத்திருந்தது.

எப்போது நாய் செல்லும் ?



ஒவ்வொரு முறையும் மருத்துவமனையின் வாசல் கதவு திறக்கும்போதும் உள்ளே ஏக்கத்துடன் எட்டிப்பார்த்து ஏமாற்றமாக வாசலில் உட்கார்ந்துவிடுமாம். கடந்த 20ம் தேதி செமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகே போன்குக் என்ற செல்ல நாய் அங்கிருந்து சென்றுள்ளது. இது குறித்து செமல்லின் மகள் அய்னூர் எகெலி கூறுகையில், ‛என் தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் வாசலில் தினமும் காலை 9 மணியளவில் போன்குக் சென்றுவிடும். ஒவ்வொரு நாளும் இரவு எங்களது செல்ல நாயை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாலும், அடுத்தநாள் காலையில் மீண்டும் அங்கு சென்று என் அப்பாவிற்காக காத்திருக்கும்,' எப்போது போகும் என்றே எங்களால் அறிய முடியாாது என்றார்.

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தன் எஜமானரை மனிதநேயத்துடன் மருத்துவமனை வாசலில் ஏங்கி காத்திருந்த செல்ல நாயின் பாசப்போராட்டம் அனைவரையும் வியக்க வைத்தது. இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவியது. நாயின் நன்றி விசுவாசத்திற்கு இணையாக மனிதமே தோற்றுப்போகும் என பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மூலக்கதை