ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்

மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரஷ்ய அதிபர் புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமசித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்சிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது. ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்சி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்சி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அலெக்சிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக ரஷ்ய அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அதனை ரஷ்யா மறுத்தது. ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வந்த நாவல்னி, குணமடைந்ததை தொடர்ந்து அங்கேயே ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து கடந்த வாரம் ரஷ்யா திரும்பிய நாவல்னியை , போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாவல்னி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் ரஷ்யாவின் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. மாஸ்கோ உள்ளிட்ட அந்நாட்டின் பல இடங்களில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு சில இடங்களில், போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டதாக நாவல்னியின் மனைவி உட்பட 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவல்னியின் மனைவி மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாவல்னி கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை ரஷ்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மூலக்கதை
