'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
அரோகரா: ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின்

தமிழகத்தில், ஈ.வெ.ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கையை, கடைபிடித்து வருவதாகக் கூறி, ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும், ஆண்டாண்டு காலமாக இழிவுப்படுத்தி வந்த, தி.மு.க.,வின் தலைவர் ஸ்டாலின், தற்போது ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், அவர்கள் ஓட்டு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில், ஹிந்து விரோத பகுத்தறிவு கொள்கைகளை, காற்றில் பறக்க விட்டுள்ளார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், ஒன்றான திருத்தணியில், முருகனின் படை ஆயுதமான வேலை கையில் ஏந்தி, 'போஸ்' கொடுத்துள்ளார். இதைக் கண்ட தி.மு.க.,வினருக்கு, 'இனிமேல் நெற்றியில் விபூதி, குங்குமம் வைப்பாரா தலைவர்' என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், பகுத்தறிவு பேசி, தி.மு.க., 1967ல் ஆட்சிக்கு வந்தது. அதன்பின், அக்கட்சி தலைவர்கள், மத சார்பின்மை என்ற பெயரில், ஹிந்து மதத்தையும், ஹிந்து மத கடவுள்களையும் இழிவுப்படுத்துவதை வாடிக்கையாக்கி கொண்டனர்.

பிற மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும், திருமண நிகழ்ச்சிகளிலும், ஹிந்து மத சடங்குகளையும், ஹிந்து மக்களின் நம்பிக்கையையும் கேவலப்படுத்தி பேசி, புளகாங்கிதம் அடைந்து வந்தனர்.சமூக வலைதளங்கள் வந்த பின், ஹிந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., தலைவர்கள், மற்ற மதத்தினரை துாக்கி வைத்து கொண்டாடுவதும், ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதும் என, அவர்களின் ஓரவஞ்சனையான செயல்பாடுகளை அறிந்து கொண்டனர்.இதன் காரணமாக, சமீப காலமாக சமூக வலைதளங்களில், 'ஹிந்து விரோத தி.மு.க.,' என்ற சொல், அடிக்கடி வலம் வருகிறது. ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, தி.மு.க.,வுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எவ்வளவு தான் திட்டினாலும், அதை கண்டுகொள்ளாமல் ஓட்டளித்த ஹிந்துக்கள், தங்களை புறக்கணித்து விடுவரோ என, பீதி அடைந்துள்ளனர்.எனவே, தேர்தல் நேரத்தில், ஹிந்துக்களுக்கு ஆதரவான கருத்துக்களை, பேசத் துவங்கி உள்ளனர். இவற்றுக்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில், நேற்று முருகனின் அறுபடை வீடான, திருத்தணி முருகன் கோவில் அமைந்துள்ள, திருத்தணி சட்டசபை தொகுதியில், கட்சியினர் கொடுத்த, வீரவேலை கையில் ஏந்தி, ஸ்டாலின் மகிழ்ச்சி பொங்க, 'போஸ்' கொடுத்து, கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகா, அம்மையார்குப்பத்தில், தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது.

அதில், ஸ்டாலின் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை வெளிக் கொண்டு வருவேன். இதன் வாயிலாக, அ.தி.மு.க.,வினரும் மகிழ்ச்சி அடைவர். அதற்கு, இன்னும் நான்கு மாதங்கள் தான் உள்ளன. வரும் சட்டசபை தேர்தலுக்கு, நாங்கள் தயாராக இருக்கிறோமோ, இல்லையோ, மக்கள் தயாராக உள்ளனர்.
விலைவாசி ஏற்றம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. இந்த தொகுதியில், நெசவாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்காக, ஜவுளி பூங்கா, திருத்தணி பஸ் நிலையம், மலைக் கோவிலுக்கு இரண்டாம் பாதை உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில், பகுத்தறிவு பாசறையில் பயின்றதாக கூறும் ஸ்டாலினுக்கு, 'வெள்ளி வேல்' வழங்கினர். அவரும் அதை மகிழ்ச்சியுடன் பெற்று, கையில் ஏந்தி போஸ் கொடுத்தார்.
அதை கண்ட மக்களும், தி.மு.க.,வினரும், 'தேர்தலுக்காக, இனி விபூதி, குங்குமம் பூசிக் கொள்வார்' என்றனர்.


ஸ்டாலின் கபட நாடகம்!



தமிழக பா,ஜ., கலை, இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் அறிக்கை:

தினம் தினம் ஹிந்து மத கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் பேசுகிறீர்கள்; தேர்தல் வந்து விட்டால் பதவியை பிடிக்க, ஹிந்துக்களின் புனித தை கிருத்திகை நாளில், திருத்தணியில், ஒரு பிரசார நாடகத்தை, வேலோடு காட்சி தந்து, நடத்துகிறீர்கள்.

தேர்தலுக்காக, இன்னும் எத்தனை கபட நாடகம் தான் போடுவீர்கள்?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தை கிருத்திகையில் வெள்ளி வேல்



* தி.மு.க., நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு, ஸ்டாலின் வருவதற்கு முன்பே, வேத விற்பன்னர்கள், அங்கு குழுமியிருந்தனர். ஸ்டாலின் வந்ததும், அவருக்கு அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் பூபதி, எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர், ஆளுயர மாலை அணிவித்து, ஐந்து அடி உயரம், எட்டு கிலோ எடையுள்ள, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வெள்ளி வேல் வழங்கினர். திருத்தணி முருகன் கோவில் அர்ச்சகர்கள் சாய், விச்சு ஆகியோர் உடன் இருந்தனர்

* ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட வேல், சென்னையில் தயாரிக்கப்பட்டது. நேற்று முன்தினம், திருத்தணி முருகன் கோவிலில், உற்சவர் சன்னிதியில் பூஜிக்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை, திருத்தணி நகர பொறுப்பாளர் வினோத் செய்திருந்தார். தை கிருத்திகை தினமான நேற்று, ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது

* இன்று, ஞாயிற்றுக் கிழமைதான் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதே நாளில், ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துாரை சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் இல்ல திருமணத்திலும், ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், ஒரு நாள் முன்னதாக, தை கிருத்திகை தினமான, நேற்று நடத்தப்பட்டது.

இதில், வெள்ளி வேல் பரிசாக வழங்கப்பட்டது. தை கிருத்திகை தினத்தில், வெள்ளி வேல் வழங்கினால், விசேஷம் என்பதால், நேற்று வழங்கப்பட்டது என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

ஓட்டுக்காக ஒரு நாடகம்!



தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஸ்ரீரங்கம் சென்றபோது, அங்குள்ள அர்ச்சகர்கள், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, நெற்றியில் விபூதி பூசினர். உடனடியாக, அதை அழித்தார். அடுத்து, தேவர் குரு பூஜைக்கு சென்றபோது, அங்கு பூசாரி அளித்த விபூதியை, கீழே கொட்டினார். இது, ஹிந்து மக்களிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போது, சட்டசபை தேர்தல் வருவதால், ஹிந்து மக்களை ஏமாற்றி, ஓட்டுகளை பெறுவதற்காக, முருகனின் வேலை கையில் ஏந்தி, போஸ் கொடுத்துள்ளார். ஹிந்துக்கள் ஏமாற மாட்டார்கள்.- ம.ஜெகன், திருவாரூர்

தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, 'ஹிந்து என்றால் திருடன்' என்றார். நெற்றியில் குங்குமம் வைத்திருந்த நிர்வாகியை பார்த்து, 'நெற்றியில் என்னையா ரத்தம்' என, கிண்டலடித்தார். அவரது வாரிசான ஸ்டாலினும், திருமண விழாவில் பங்கேற்றபோது, ஹிந்து மத சடங்குகளை இழிவுப்படுத்தினார். இன்று ஓட்டுக்காக, முருகனின் வேல் ஏந்தி நாடமாடுகிறார்.- டி.சிவகுமார், திருத்தணி

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஹிந்துக்களின் பண்டிகைகளான விநாயக சதுர்த்தி, தீபாவளி போன்றவற்றுக்கு, வாழ்த்து சொல்வதில்லை. பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறி, ஹிந்து மத விரோதத்தை வெளிப்படுத்துவார். தற்போது, ஹிந்துக்கள் ஓட்டுகளைப் பெற, இவர் நடத்தும் நாடகம் எடுபடாது.- எஸ்.வள்ளி, திருச்சி

தி.மு.க., தலைவர் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும், வெளியில் ஹிந்து மதத்திற்கு விரோதமாக செயல்படுவர். ஆனால், குலதெய்வ கோவிலுக்கு ரகசியமாக சென்று வருவர். அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், கோவில் கோவிலாக சென்று வருகின்றனர். இவர்கள் இரட்டை வேடம் போடுவதை, மக்கள் உணர்ந்து கொண்டனர். - கே.அம்பிகா, திருக்குவளை, நாகை.

ஹிந்துக்களை கேவலப்படுத்துதையே வழக்கமாகக் கொண்டிருந்தார், கருணாநிதி. அவரது மகள் கனிமொழி, 'திருப்பதி பெருமாள் கோவில் உண்டியலுக்கு, பாதுகாப்பு எதற்கு? கடவுள் இருப்பது உண்மை என்றால், அவர் உண்டிலை பாதுகாக்க மாட்டாரா?' என கிண்டலடித்தார்.
தற்போது, ஓட்டுக்காக, தி.மு.க., தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டதோ என்னவோ?
- ப.கந்தன், செங்கல்பட்டு.-- நமது நிருபர் -

மூலக்கதை