நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு கார் * ஆறு வீரர்களுக்கு பரிசு | ஜனவரி 23, 2021

தினமலர்  தினமலர்
நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு கார் * ஆறு வீரர்களுக்கு பரிசு | ஜனவரி 23, 2021

புதுடில்லி: ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் க்ஷ, நவ்தீப் சைனிக்கு கார் பரிசாக  வழங்கப்பட உள்ளது. 

ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலர் காயத்தால் விலகினர். இரண்டாவது டெஸ்டில் முகமது சிராஜ், சுப்மன் கில், மூன்றாவது  டெஸ்டில் நவ்தீப் சைனி, நான்காவது டெஸ்டில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அறிமுக ஆக, ஷர்துல் தாகூரும் தனது 2 வது டெஸ்டில் களமிறங்கினார்.  ஒட்டுமொத்தமாக 3 டெஸ்டில் சுப்மன் 259 ரன், சிராஜ் 13 விக்கெட், 19 ரன்கள் எடுத்தார்.

ஷர்துல் தாகூர் 69 ரன், 7 விக்கெட், வாஷிங்டன் 84 ரன், 4 விக்கெட், நடராஜன் (7 விக்.,), சைனி (5 விக்.,) என அனைவரும் அசத்த, இந்தியா 2–1 என  தொடரை கைப்பற்றியது. 33 ஆண்டில் முதன் முறையாக பிரிஸ்பேன் கோட்டையை தகர்த்து, ஆஸ்திரேலியாவை வென்ற முதல் அணியானது இந்தியா.  இதையடுத்து இளம் வீரர்களை  கவுரவிக்கும் வகையில், மஹிந்திரா நிறுவனம் சார்பில் ‘தார்–எஸ்.யு.வி.,’ கார் பரிசாக வழங்கப்படுகிறது. இதன்  ஒவ்வொன்றின் மதிப்பு ரூ. 14 லட்சம் வரை இருக்கும்.

உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா, தனது ‘டுவிட்டரில்’ ஒவ்வொரு வீரர்கள் வளர்ந்த கதை குறித்த வீடியோவை வெளியிட்டார். அதில் அவர்  கூறுகையில்,‘‘சமீபத்தில் முடிந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்திரேலிய தொடரில் ஆறு வீரர்கள் அறிமுகம் ஆகினர். இதில் ஷர்துல் 2வது டெஸ்ட் தான்  என்றாலும் முதல் டெஸ்டில் 10 பந்து மட்டும் வீசி காயத்தால் வெளியேறினார். இவர்கள் அனைவரும் இணைந்து இந்தியாவின் எதிர் கால  தலைமுறையினர் கனவு காணவும், அதை நிறைவேற்றவும் முடியும் என்பதை சாத்தியமாக்கினர்,’ என தெரிவித்துள்ளார்.

 

சாதனை வீரர்கள்

ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட வீடியோ  விபரம்:

1. முகமது சிராஜ் 

சிட்னி பயிற்சி போட்டிக்கு முன் சக வீரர்களுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் சிராஜ். அப்போது ஆட்டோ டிரைவரான சிராஜ் தந்தை  காலமானார். நாடு திரும்பி இந்திய கிரிக்கெட் போர்டு அனுமதித்த போதும், தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கி, தந்தை கனவை நிறைவேற்றப்  போவதாக தெரிவித்தார். சிட்னியில் ரசிகர்கள் இனவெறியை துாண்டினர். கடைசியில் 3 டெஸ்டில் 13 விக்கெட் சாய்த்து அசத்தினார்.

 

2. நவ்தீப் சைனி

ஹரியானாவின் கர்னால் என்ற இடத்தில் பின்தங்கிய சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர் நவ்தீப் சைனி. பஸ் டிரைவரான இவரது அப்பா, மகனுக்கு 5  வயதில் பிளாஸ்டிக் பந்துகளை வாங்கித் தந்தார். உடன் பிறப்புகளுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார். கிரிக்கெட் அகாடமியில் சேர  முடியாததால், உள்ளூர் தொடர்களில் விளையாடினார். ஒரு போட்டிக்கு ரூ. 250 ரூபாய் கிடைத்தது. டில்லி ரஞ்சி அணிக்கு வந்த போது தான் சிகப்பு நிற  பந்தில் விளையாடினார். 

 

3. ஷர்துல் தாகூர்

இளமையில் பயிற்சிக்காக பால்கரில் இருந்து அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து, 4:00 மணி ரயிலை பிடித்து மும்பைக்கு 7:30 மணிக்கு பயிற்சிக்கு  செல்வார். தினமும் போக வர 7:00 மணி நேர பயணம் செய்து சென்று பயிற்சியில் ஈடுபட்டார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கான உடல் அமைப்பு  இல்லாமல் அவதிப்பட்டார். 5 அடி, 9 இன்ச் உயரத்தில் 83 கி.கி., எடை இருந்ததால், மும்பை 19 வயது அணியில் சேர்க்க மறுத்தனர். 13 கி.கி., எடை  குறைத்து அணியில் இடம் பெற்றார். கடைசி நேரத்தில் சிறப்பான ‘அவுட் சுவிங்கர்’ வீசுவார். இது ரஞ்சி கோப்பை மும்பை அணியில் முக்கிய வீரர்  ஆக்கியது. 2018 டெஸ்ட் அறிமுக போட்டியில் காயத்தால் 10 பந்தில்  வெளியேறி, தற்போது மீண்டும் சாதித்துள்ளார்.

 

4. நடராஜன்

சேலம், சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். வறுமையின் கொடுமையை உணர்ந்தவர். தந்தை நெதவுத் தொழிலாளி, தாயார் சாலையில்  தள்ளுவண்டி வியாபாரம் செய்தார். படிக்கும் போது நோட், பேனா வாங்கக் கூட பணமில்லாமல் இருந்தார். டென்னிஸ் பந்தில் மட்டும் தான் கிரிக்கெட்  விளையாடினார். 2017 ல் பஞ்சாப் அணி அறிமுகமற்ற வீரரை அதிகவிலைக்கு, ரூ. 3 கோடிக்கு வாங்கியது. உடனடியாக பெற்றோர் வேலைக்கு  செல்வதை நிறுத்தினார். தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் மூன்று வித போட்டியிலும் அறிமுகம் ஆன ஒரே இந்தியர் ஆனார்.

 

5. வாஷிங்டன் சுந்தர்

தந்தை சுந்தரின் நண்பர் வாஷிங்டன். இவர் பிறந்த 1999 ல் வாஷிங்டன் மரணம் அடைந்தார். அவரது நினைவாக மகனுக்கு வாஷிங்டன் என  பெயரிட்டார் சுந்தர். பள்ளிக்கு செல்லும் முன் தினமும் 3:00 மணி நேரம் தந்தையின் அகடாமியில் பயிற்சி செய்தார். 9 வயதில் பந்து தலையில் தாக்கி 5  தையல் போடப்பட்டன. மறுநாள் பள்ளி அளவிலான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றிக்கு உதவினார். பிரிஸ்பேனில் ஸ்மித்தை வீழ்த்தியது,  123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது, இந்தியா கோப்பை வெல்ல உதவியது.

 

6. சுப்மன் கில்

பஞ்சாப்பின் பஜில்கா மாவட்டத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடுவதற்காக இவரது குடும்பம் மொகாலி வந்தது. 2007 முதல் தந்தையிடம் பயிற்சி  எடுத்தார். பொம்மைகளை கூட கிரிக்கெட் பேட் போல வைத்து தான் விளையாடினார். ஒரு ஸ்டம்பை வைத்து, பாயை விரித்து பந்துகளை பவுன்சராக  வீசச் செய்து பயிற்சி எடுத்தார். இது ஆஸ்திரேலிய தொடரில் கைகொடுக்க, எதிரணி பவுன்சர்களை சாதாரணமாக எதிர்கொண்டார். 

இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை