முஷ்டாக் அலி டி20 ‘நாக் அவுட்’ வீரர்களுக்கு கொரோனா இல்லை

தினகரன்  தினகரன்
முஷ்டாக் அலி டி20 ‘நாக் அவுட்’ வீரர்களுக்கு கொரோனா இல்லை

அகமதாபாத்: சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் நாக் அவுட் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையின் லீக் சுற்றில் 38 அணிகள் பங்கேற்றன. சென்னை, கொல்கத்தா, ஆளூர், வதோதரா, மும்பை, இந்தூர் ஆகிய 6 நகரங்களில் நடந்த லீக் சுற்றின் முடிவில் தமிழ்நாடு, பரோடா, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் அணிகள் நேரடியாகவும், இமாச்சல் பிரதேசம், கர்நாடகா 2வது வாய்ப்பின் மூலமும் என 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாக் அவுட் சுற்று போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அதன்படி காலிறுதி போட்டிகள் ஜன.26, 27 தேதிகளிலும், அரையிறுதி போட்டிகள் ஜன.29ம் தேதியும், இறுதிப்போட்டி 31ம் தேதியும் நடைபெறும்.காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளின் வீரர்கள் அனைவரும் அகமதாபாத் போய் சேர்ந்தனர். அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள், அணி நிர்வாகிகள், கள ஊழியர்கள் எல்லோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளனர். தேர்வுக் குழு முன்னிலையில்: குஜராத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், ‘நாக் அவுட் சுற்றுப் போட்டிகளை பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பார்வையிடுவார்.  கூடவே தேர்வுக் குழுவில் உள்ளவர்களும் போட்டிகளை பார்வையிடக் கூடும். எப்படியிருந்தாலும், தேர்வுக் குழுவில் இருந்து ஒருவர் கட்டாயம் போட்டியை பார்வையிட வருவார் என்பது உறுதி’ என்றார். இந்திய டி20 அணிக்கு புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான நல்ல வாய்ப்பாக முஷ்டாக் அலி நாக் அவுட் சுற்று அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மூலக்கதை