பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தினகரன்  தினகரன்
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் அடுத்த ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,  சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அனுப்பிய  பரிந்துரையின் மீது மாநில ஆளுநர் தற்போது வரை முடிவெடுக்காமல் உள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநர் காலதாமதம் செய்து வருவதாகவும், வழக்கில் சிபிஐ சரியான ஆதாரங்களை தாக்கல் செய்ய வில்லை என்பதால்,  தன்னை முன்கூட்டியே வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, ராஜிவ்  காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட அனைவரையும் விடுவிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு கிடையாது. ஜனாதிபதிதான் இறுதி முடிவை எடுக்க முடியும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து மேற்கண்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா கூறியதில், “அரசியல் சாசன சட்டம் 161வது  பிரிவின்படி மாநில அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுவிக்க கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் முடிவெடுத்து அனுப்பிய பரிந்துரை குறித்து தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாளில் முடிவெடுப்பார்’’ என நீதிமன்றத்தில்  உறுதியாக தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோபால் சங்கர நாராயணன் மற்றும் பிரபு ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் நேற்று  கோரிக்கை வைத்தனர். அதில், “கடந்த விசாரணையின் போது பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்றுதான் மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், வழக்கு தொடர்பாக கடந்த வியாழக்கிழமை மாலை வெளியான நீதிமன்ற உத்தரவின் நகலில் நான்கு வாரங்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு வாதங்கள் முன்வைத்ததை அடிப்படையாகக் கொண்டு வழக்கை நான்கு  வாரம் ஒத்திவைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என தெரிவித்தனர். அப்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று தான் நீதிமன்றத்தில் நான் வாதங்களை முன்வைத்தேன் என  நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், “உங்களது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இதில் முந்தைய உத்தரவில் திருத்தம் செய்யப்படும். இருப்பினும் பேரறிவாளனை விடுதலை செய்யும்  விவகாரத்தில் அடுத்த ஒரு வாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது’’ என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக நேற்று தெரிவித்தனர்.

மூலக்கதை