ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரூ.150 கோடி அகஸ்தீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு

தினமலர்  தினமலர்
ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரூ.150 கோடி அகஸ்தீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம், அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிரவுண்டு நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

சென்னை, நுங்கம்பாக்கம், மேற்குமாட வீதியில் அமைந்துள்ளது, அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில். கடந்த, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், பல ஏக்கர் நிலங்கள், கட்டடங்கள் உள்ளன.நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் சாலையில் உள்ள, 15 கிரவுண்ட் நிலத்தை, 30 ஆண்டுகளாக, சீனிவாசன், மோகனா என்பவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

அந்த இடத்தில், பல குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். இது தொடர்பாக, அறநிலையத்துறை இணை கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்பை அகற்றி கையகப்படுத்த உத்தரவிடப்பட்டது.


இதையடுத்து, அறநிலையத்துறை சட்டப் பிரிவு, 78ன் படி, சென்னை மண்டல இணைக் கமிஷனர் ஹரிபிரியா, உதவிக் கமிஷனர் கவேனிதா ஆகியோர், வருவாய் அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில், நேற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றியதோடு, கட்டடத்தையும் கையகப்படுத்தி, 'சீல்' வைத்தனர்.

மூலக்கதை