24 ஆயிரம் கோடியை நோக்கி...! பின்னலாடை நகரின் ஏற்றுமதி: ஆர்டர் அதிகரிப்பால் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
24 ஆயிரம் கோடியை நோக்கி...! பின்னலாடை நகரின் ஏற்றுமதி: ஆர்டர் அதிகரிப்பால் நம்பிக்கை

திருப்பூர்:கடந்த ஏப்., முதல் டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 16 ஆயிரத்து 479 கோடி ரூபாயை எட்டியுள்ளது; இந்த நிதியாண்டின்(2020-21) மொத்த வர்த்தகம், 24 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், அமெரிக்கா, ஐரோப்பா, கடனா உட்பட உலகளாவிய நாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று ஆடை தயாரிக்கின்றன. நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூரின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது.கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், திருப்பூரின் ஏற்றுமதி, 27 ஆயிரத்து 650 கோடியை எட்டிப்பிடித்தது. கொரோனாவால், கடந்த 2020, பிப்., மாதம் முதல் சர்வதேச ஆடை வர்த்தக சந்தை முடங்கியது. இதனால், 2019 - 20ம் நிதியாண்டில், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் 27,280 கோடி ரூபாயாக குறைந்தது.
முழு ஊரடங்கு, வெளிநாடுகளில் ஆடை வர்த்தகம் பாதிப்பால், இந்த நிதியாண்டில்(2020-21) ஏப்., மே, ஜூன் ஆகிய முதல் காலாண்டில், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், சரிவடைந்தே காணப்பட்டது.கடந்த ஏப்ரலில், திருப்பூரின் ஏற்றுமதி, வெறும் 76 கோடி ரூபாயாக மட்டும் இருந்தது. மே மாதம் 790 கோடி; ஜூன் மாதம், ஆயிரத்து 652 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.ஜூலைக்கு பின்பே, ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலையான, மாதம் 2 ஆயிரம் கோடியை கடந்தது. அந்த வகையில், இந்த நிதியாண்டில், ஏப்., முதல் டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், மொத்தம் 16 ஆயிரத்து 479 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:கடந்த 2019 - 20ம் நிதியாண்டில், ஏப்., முதல் பிப்., வரையிலான 11 மாதங்கள், வர்த்தகம் சிறப்பாக நடந்தது. மார்ச்சில் மட்டுமே, வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கடந்த 2019 - 20ம் நிதியாண்டில், ஏப்., முதல் டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், திருப்பூரின் ஏற்றுமதி, 20 ஆயிரத்து 286 கோடியை எட்டியிருந்தது.இந்த நிதியாண்டில்(2020 - 21), ஏப். முதல் ஜூன் வரையிலான முதல் மூன்று மாதங்கள், வர்த்தகம் சரிந்து காணப்பட்டது. இதனால், இந்த நிதியாண்டில், ஒன்பது மாதங்களில், 16 ஆயிரத்து 479 கோடியையே எட்டமுடிந்துள்ளது.
நிதியாண்டு நிறைவடைய, இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து, ஆடை உற்பத்திக்கான ஆர்டர் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டுக்கான மொத்த ஏற்றுமதி வர்த்தகம் 24 ஆயிரம் கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை