ஆம்புலன்சில் 'குவா...குவா!' ஒன்றல்ல, இரண்டல்ல...நாற்பத்தியாறுகொரோனா தொற்று காலகட்டத்தில் மருத்துவ உதவியாளர்கள் பணி ஜோரு!

தினமலர்  தினமலர்
ஆம்புலன்சில் குவா...குவா! ஒன்றல்ல, இரண்டல்ல...நாற்பத்தியாறுகொரோனா தொற்று காலகட்டத்தில் மருத்துவ உதவியாளர்கள் பணி ஜோரு!

கோவை:கோவையில், கடந்தாண்டு கொரோனா காலகட்டத்தில், நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் கைவிட்ட நேரத்தில், அரசு மருத்துவமனைகள்தான் நோயாளிகளை அரவணைத்து காப்பாற்றின. இதில், '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேவை, அதை விட பிரமாதம். ஆம்புலன்சிலேயே 46 பிரசவங்கள் பார்த்து, உயிர்களை காப்பாற்றியுள்ளனர்.
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்திருந்தபோது, கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்லவும், சிகிச்சை முடிந்து வீட்டில் கொண்டு விடவும், ஆம்புலன்ஸ்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. கடந்த ஓராண்டில் மட்டும் 46 பிரசவங்கள் ஆம்புலன்சில் நடந்துள்ளன.
இது குறித்து, '108' ஆம்புலன்ஸ் சேவை, மாவட்ட மேலாளர் செல்வ முத்துக்குமார் கூறியதாவது:கடந்த 2019ல், 10,013 பேர் சாலை விபத்துகளில் சிக்கி, ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்கப்பட்டனர். அதுவே, கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு இருந்ததால், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது. ஆனாலும், 7,689 பேர் சாலை விபத்துகளில் சிக்கி, ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டனர்.
கொரோனா ஊரடங்கின் போது, பொது போக்குவரத்து சேவை முடக்கப்பட்டிருந்ததால், கர்ப்பிணிகள் பலரை பிரசவத்துக்கு, முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல மருத்துவமனைகள் கொரோனா பயத்தால், கர்ப்பிணிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் வலி கண்ட பிறகுதான், அவர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைகளுக்கு புறப்பட வேண்டியதாயிற்று.
இதனால் பாதி வழியில் பிரசவங்கள் நடந்தன. அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சேவைதான், அவர்களுக்கு கைகொடுத்தது.இப்படி, மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே, ஆம்புலன்சில் மட்டும் கடந்தாண்டு 46 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம்புலன்ஸ் வரும் முன், வலி கண்ட 104 தாய்மார்கள் வீட்டிலேயே பிரசவிக்க வேண்டியதாயிற்று.இவர்களுக்கும், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள்தான், நல்லபடியாக பிரசவம் நடக்க உதவியுள்ளனர்.
அதன்படி, மொத்தம் 8,982 கர்ப்பிணிகள் ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
'102'ம் சளைத்ததல்ல!
தாய் சேய் நல மாவட்ட திட்ட மேலாளர்நவீன் பிரபு கூறுகையில், ''புற்றுநோய், சர்க்கரை நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வந்து, மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடவும், 102 ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், 1,440 சர்க்கரை நோயாளிகள், 153 புற்றுநோயாளிகளுக்கு '102 ஆம்புலன்ஸ்' சேவை அளிக்கப்பட்டுள்ளது. அமரர் ஊர்தி வாகனம் மூலம், பிரேத பரிசோதனைக்கு பின், 5,800 உடல்கள் வீடுகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.சாலை விபத்தில் மீட்பு2019 - 10,0132020 - 7,689வீட்டில் பிரசவம் - 104ஆம்புலன்சில் பிரசவம் - 46

மூலக்கதை