இது உங்கள் இடம்: அதெல்லாம் மறக்க முடியுமா?

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: அதெல்லாம் மறக்க முடியுமா?

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்


கார்த்திக்குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தேர்தல் நெருங்குவதால், 'தி.மு.க., ஹிந்து விரோத கட்சி இல்லை' என, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், இரட்டை வேடம் போடுகிறார். நம்மை எல்லாம், மறதி மன்னர்கள் என நினைத்து விட்டாரா?தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், திருக்குவளை சிவன் கோவிலில் இசைக் கலைஞராக பணியாற்றியவர். அவர் வழியில் வந்த குடும்பம் தான், ஹிந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது.சங்கராபுரம் முன்னாள், எம்.பி., ஆதிசங்கரரின் நெற்றியில் இருந்த குங்குமத்தைப் பார்த்து, 'ரத்தம் வடிகிறதே...' என பரிகாசம் செய்தார், கருணாநிதி.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவி ராசாத்தி மற்றும் மருமகள் துர்கா ஆகியோரது நெற்றியில் இருப்பது மட்டும், அவருக்கு ரத்தமாக தெரியவில்லை.

தி.மு.க.,வில் இருந்தாலும், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், சிறந்த ஆன்மீகவாதி. 1996ல் கதர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தீ மிதித்தார். இதற்காக, அவரின் அமைச்சர் பதவியை பறித்தார், கருணாநிதி. மருமகளை மட்டும் பதவி நீக்கம் செய்யவில்லை.'என் மனைவி துர்கா, கோவிலுக்கு செல்கிறார்' என, ஸ்டாலின் கூறுகிறார். ஊர் அறிந்த ரகசியத்தை ஒப்புக்கொண்டு, ஓட்டு வேட்டை நடத்துகிறார்.

ஸ்டாலின் தங்கை கனிமொழி, 'திருப்பதி உண்டியலுக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு? பெருமாள், சக்தி உள்ளவராக இருந்தால், அவரே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தானே?' என, விமர்சித்தார்.அப்படி பேசியவருக்கு, திருப்பதி கோவிலில் என்ன வேலை? அங்கு ஏன் செல்ல வேண்டும்?திடீரென ஸ்டாலின், ஹிந்து மீது அக்கறை காட்டுகிறார். ஆண்டாளை, வைரமுத்து கீழ்த்தரமாக விமர்சித்த போது, அவர் கண்டிக்கவில்லை.

கந்த சஷ்டி கவசத்தை, கருப்பர் கூட்டம் இழிவாக பேசிய போது, ஸ்டாலின் எங்கு மறைந்திருந்தார்?கிறிஸ்துவ மத குரு ஒருவர், 'ஹிந்து என்றாலே, உடம்பெல்லாம் எரிகிறது...' என்றபோது, ரசித்து மகிழ்ந்தவர் தான், இந்த ஸ்டாலின்.முஸ்லிம் திருமண விழாவில், ஹிந்து சடங்கு குறித்து கொச்சைப்படுத்தி பேசியவர், இதே ஸ்டாலின் தான்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில், தனக்கு கொடுக்கப்பட்ட திருநீறை கீழே கொட்டி அவமதித்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டபோது, குங்குமத்தை அழித்து, ஹிந்துக்களின் மனதை காயப்படுத்தினார்.மற்ற மத விழாக்களில் பங்கேற்று, ஹிந்து மதத்தை இழிவுப்படுத்துவது, தி.மு.க., தலைவருக்கு மிகவும் பிடித்த செயல்.தேர்தலுக்காக, 'தி.மு.க., ஹிந்து விரோத கட்சி அல்ல' என கெஞ்சும் அளவிற்கு வந்து விட்டார். ஆனால், தி.மு.க.,வின் இரட்டை வேஷத்தை, ஹிந்துக்கள் தெளிவாக புரிந்துள்ளனர்; இனி அவர்களை ஏமாற்ற முடியாது.

மூலக்கதை