கிளப்புறாங்கய்யா... :உலகம்

தினமலர்  தினமலர்
கிளப்புறாங்கய்யா... :உலகம்

தண்ணீரில் கண்டம்

தெற்கு ஈரான் பகுதியில், உள்ள தெஜ்ஹாக் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமோவ் ஹாஜி. இவருக்கு, தண்ணீர் என்றாலே பயம். இதன் காரணமாகவே, 67 ஆண்டுகளாக தண்ணீரில் தன் உடலை நனைத்ததில்லை. குளித்தால், தான் நோய்வாய் பட்டுவிடுவோம் என்பது அவரது நம்பிக்கை. இதனால், உடல் முழுக்க புழுதி படர்ந்து காட்சியளிக்கிறது. மேலும், இறந்த விலங்குகளின் அழுகிய உடற்பாகங்களை தான் சாப்பிடுகிறார். இந்த வினோத மனிதரின் பழக்கவழக்கங்கள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்பட செய்துள்ளது.

கோட்டை தாண்டி வரக்கூடாது

தாய்லாந்தில், கிழக்கு பகுதியில் உள்ள ரோங் என்ற இடத்தில் வீட்டு நாயும், தெருவில் சுற்றித் திரியும் நாயும் சிறிய கேட்டுக்கு இருபுறமும் நின்று கொண்டிருக்கின்றன. கேட்டை மூடினால், சண்டையிட்டு கொள்ளும் நாய்கள், திறந்த மறுநொடியே அமைதியாகி விடுகின்றன. மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள், தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்கள், 'இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்' என்பது போல் இருப்பதாக, கிண்டலடித்துள்ளனர்.

பாம்பை கொன்ற கோழி

ஆஸ்திரேலியாவின், சத்ரன் விக்டோரியா என்ற இடத்தில், வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி, தனது கூண்டுக்கு அருகே விஷப்பாம்பு வருவதை கண்டு கூச்சலிடுகிறது. பாம்பு, கோழியை கொல்ல முயற்சிக்க, அதை பற்றி சற்றும் அலட்டி கொள்ளாமல், கோழி கடுமையாக சண்டையிட்டது. இறுதியில், பாம்பின் தலையை கொத்தி, கொய்தது. இதில், பாம்பு உயிரிழந்ததால், சிறு புழு போல அலேக்காக பாம்பை விழுங்கியது கோழி. தற்போது, இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கேமராவை துாக்கிய சிங்கம்

ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில், லுவாங்வா தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள, புல்வெளி பகுதியில் சிங்க கூட்டம் ஒன்றை நெருக்கமாக ஆய்வு செய்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் தானியங்கி கேமராவை வைத்தனர். அதை கண்ட பெண் சிங்கம் ஒன்று, கேமராவை காலால் தட்டியும் கடித்தும் விளையாடுகிறது. அதனுடன் சேர்ந்து கொண்ட மற்றொரு சிங்கம் இரையென நினைத்து அந்த கேமராவை துாக்கி கடித்தது. இறுதியில், கேமராவை துவம்சம் செய்துவிட்டு, ஓரமாக போட்டு விட்டு சென்றன.

மூலக்கதை