தீவிரம்: குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் பணி...கடலூரை தூய்மையாக்க நடவடிக்கை

தினமலர்  தினமலர்
தீவிரம்: குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் பணி...கடலூரை தூய்மையாக்க நடவடிக்கை

கடலுார்: கடலுார் குப்பைக் கிடங்குகளில் தேங்கியுள்ள குப்பைகளை 'பயோ மைனிங்' எனும் நவீன முறையில் பிரித்தெடுத்து அகற்றும் பணி துவங்கியள்ளது.

கடலுார் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சராசரியாக 33 டன் குப்பைகள் சேகரமாகிறது.அதில், 16.5 டன் மக்கும் குப்பைகள், 15 டன் மக்கா குப்பைகள், 1.5 டன் கட்டட இடிபாடுகள் ஆகும். தினசரி சேகரமாகும் குப்பைகள், மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் பிரித்து மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் அரியலுார் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.சமீபகாலமாக கடலுாரில் குப்பைகள் இந்த வகையில் கையாளப்பட்டு வரும் நிலையில், கடந்த காலங்களில் சேகரமான குப்பைகள், திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை, முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் ஆகிய இடங்களில் கிடங்குகள் அமைத்து கொட்டப்பட்டன.அங்கு கொட்டப்பட்டிருந்த நாள்பட்ட குப்பைகளை அடிக்கடி எரிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் அப்பகுதிமக்கள் அவதியடைந்து வந்தனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 'பயோ மைனிங்' எனும் நவீன முறைப்படி நாள்பட்ட குப்பைகளைப் பிரித்தெடுத்து முற்றிலும் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதற்காக 6.75 கோடி ரூபாயக்கு தனியார் நிறுவனத்திடம் டெண்டர் விடப்பட்டுள்ளது.ஏற்கனவே, கும்பகோணம், சென்னையில் செம்பாக்கம், பம்மல் மற்றும் ஈரோடு நகராட்சிகளில் இம்முறையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சிக்மா நிறுவனம் கடலுாரிலும் இப்பணியை துவங்கியுள்ளது.நவீன உபகரணங்கள் மூலம், 'பயோ மைனிங்' திட்டம் கடலுாரில் இரண்டு குப்பைக் கிடங்குகளிலும் உள்ள குப்பைகள் அனைத்தும் 'ஜீரோ வேஸ்ட்' என்ற அடிப்படையில் பிரித்தெடுக்கப்பட உள்ளது.தற்போது, முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பத்தில் இப்பணி துவங்கி தீவிரமாக நடக்கிறது. நாள் ஒன்றுக்கு 600 கன அடி அளவில் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

இதில், பிளாஸ்டிக், இரும்பு, மரம், பாட்டில், மக்கும் குப்பை என, தரம் வாரியாக பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்குகளில் ஒரு மாதத்தில் பணி முடிக்கப்பட்டு விடும்.அடுத்த கட்டமாக கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கில் பணிகள் துவங்கும். இரு குப்பைக் கிடங்குகளும் சுத்தம் செய்யப்பட்டு, நகராட்சியின் பயன்பாடுகளுக்கு இந்த இடங்கள் ஒப்படைக்கப்படும்.மீண்டும் குப்பைகளை இங்கு கொட்டக்கூடாது என்பதால் குப்பைக் கிடங்குகள் இல்லாத துாய்மை நகராட்சியாக மாறும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை