நடவடிக்கை: தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல...கால்வாய் வழித்தடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

தினமலர்  தினமலர்
நடவடிக்கை: தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல...கால்வாய் வழித்தடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது குறித்து தாசில்தார் தலைமையில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

திருக்கோவிலுார் தெப்பக்குளத்திற்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் வகையில் பாதாள கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே மன்னராட்சி காலத்தில், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புராதன நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மையின் மிகப்பெரும் அடையாளமாக இந்த பாதாள கால்வாய் இருந்து வருகிறது.சிலர் கால்வாய் மீது ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி அடைத்து அதன் காரணமாகவும் முறையான பராமரிப்பு இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளாக குளத்திற்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக, பெருமாள் தெப்பத்தில் இக்குளத்தில் வலம் வரும் காட்சியை காண முடியாமல் பக்தர்கள் தவிப்பது ஒருபக்கம் என்றாலும், குளம் வற்றியதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நகரில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அவலநிலை உள்ளது.தற்பொழுது ஏரியில் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில், தெப்பகுளம் தண்ணீர் இன்றி வற்றிக் கிடக்கிறது.

குடிமராமத்து என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், தெப்பக் குளத்திற்கு தண்ணீர் வரும் பழமையான கால்வாயை சீரமைக்க தவறிய அரசின் நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், தாசில்தார் சிவசங்கரன் தலைமையில், பொதுப்பணித்துறை பொறியாளர் பாலாஜி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை, ஏரி பாசன விவசாய சங்கத் தலைவர் பாபு ஆகியோர் ஏரியிலிருந்து குளத்திற்கு வரும் பாதாள கால்வாய் வழித்தடத்தையும், எந்தெந்த இடத்தில் அடைப்பு இருக்கும் என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தனர்

.விரைவில் தடைகள் அகற்றப்பட்டு ஏரியிலிருந்து குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் சிவசங்கரன் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் ஆர்.டி.ஓ., சாய்வர்த்தினியின் அதிரடி நடவடிக்கை மூலம் பாதாள கால்வாய் வழியாக தண்ணீர் சென்று குளம் நிரம்பி நகரில் மீண்டும் நீர் மேலாண்மை வளம் பெறும் என்ற நம்பிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மூலக்கதை