ரூ.10.72 கோடி: புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்...மாவட்டத்தில் 15,938 பேருக்கு இதுவரை வழங்கல்-

தினமலர்  தினமலர்
ரூ.10.72 கோடி: புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்...மாவட்டத்தில் 15,938 பேருக்கு இதுவரை வழங்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், சேதமடைந்த 9,033.81 ஹெக்டேர் பயிருக்கு, இதுவரை 15,938 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.10.72 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 2,80,072 ஹெக்டேர் நிகர சாகுபடி பரப்பாக உள்ளது.மாவட்டத்தின் வழியே ஓடும் தென்பெண்ணை, சங்கராபரணி ஆகிய ஆறுகளும், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 506 ஏரிகள், விவசாயத்தின் நீர் ஆதாரமாக உள்ளது.இந்த மாவட்டத்தின் மேற்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்யும் மழை தென்பெண்ணை ஆறுகளில் பெருக்கெடுத்து வந்து, உபரி நீர் ஏரிகளில் நிரம்பும். மாவட்டத்தின் இயல்பான மழையளவு 1,060 மி.மீ., ஆகும். இதில், தென்மேற்கு பருவ மழையில் 356.66 மி.மீ., மற்றும் வடகிழக்கு பருவ மழையில் 638 மி.மீ., என ஆண்டின் சராசரி மழை அளவாக உள்ளது.இதில், கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை மாவட்டத்தில் 320.49 மி.மீ., பெய்தது.

இதேபோன்று, வடகிழக்கு பருவமழையானது, நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக, சராசரி அளவான 638.11 மி.மீ.,விட, 61.64 மி.மீ., கூடுதலாக பதிவாகியது.இந்த இரண்டு புயல்களின்போதும், மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததில், உளுந்து, நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.இதில், நிவர் புயலின்போது 1,626.6 ஹெக்டேர் மற்றும் புரெவி புயலின்போது 7,407.21 ஹெக்டேர் என மொத்தம் 9,033.81 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்தது. இதில், நிவர் புயலின்போது 2,880 விவசாயிகளும், புரெவி புயலின்போது 16,029 விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர்.புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கு மற்றும் நில ஆவணங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.அதன்படி, இரண்டு புயல்களின் போது, பாதிக்கப்பட்ட 18,890 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நிவாரணம் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

.இந்த நிவாரண தொகையானது, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.இதில், மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரமும், இறவை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகின்றது.அதன்படி, நிவர் புயலால் பாதித்த விவசாயிகளில் 2,367 பேரின், 1,247.43 ஹெக்டேருக்கு 1 கோடியே 92 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்று, புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 13,571 பேரின் 6,275.31 எக்டேருக்கு 8 கோடியே 80 லட்சத்து 88 ஆயிரத்து 430 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இது, மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மொத்த விவசாயிகள் 18,890 பேரில், 15 ஆயிரத்து 938 பேருக்கு, 10 கோடியே 72 லட்சத்து 88 ஆயிரத்து 430 ரூபாய் இதுவரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 2,952 விவசாயிகள் சமர்ப்பித்த வங்கி கணக்குகள் தவறாக இருப்பதால், அதை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்பின், மீதமுள்ள விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

நமது நிருபர்-

மூலக்கதை