ரூ.730 கோடி பரிசு வேண்டுமா: உலகின் நம்பர் ஒன் பணக்காரர் அறிவிப்பு

தினமலர்  தினமலர்

கலிபோர்னியா:கார்பன் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடாமல் கைப்பற்றி நீக்கும் சிறந்த தொழில்நுட்பத்தை பரிந்துரைப்பவர்களுக்கு 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.730 கோடி) பரிசளிக்கப்படும் என உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் பெரும் கவலைக்குரிய பிரச்னையாகியுள்ளது. தொடர்ச்சியாக அதிக பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியேற்றுவது தான் இப்பிரச்னைக்கு முக்கிய காரணம். தொழிற்சாலை, மின்உற்பத்தி, படிம எரிபொருட்கள் பயன்பாடு போன்றவற்றால் இவ்வாயுக்கள் அதிகம் வெளியேற்றப்படுகின்றன.

இந்நிலையில் மின் கார்கள் உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கார்பன்களை கைப்பற்றி நீக்கும் தொழில்நுட்பம் பற்றிய விவாதத்தை துவக்கி வைத்தார்.சிறந்த 'கார்பன் கேப்சர்' தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்பவர்களுக்கு பரிசளிக்க 100 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.730 கோடி) நன்கொடை அளிப்பதாக கூறியுள்ளார். விரிவான தகவல்களை அடுத்த வாரம் அளிப்பதாக கூறியுள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவை சில மணி நேரங்களில் பல லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர். பலரும் மரம் நடுவது தான் சிறந்த வழி என்று கூறியுள்ளனர். இந்திய வனப் பணி அதிகாரி பர்வீன் கஸ்வான், மாங்குரோவ் மரங்களின் படத்தை அனுப்பி சிறந்த கார்பன் கேப்சர் தொழில்நுட்பம் என்று கூறியுள்ளார். தேவை என்றால் மேற்கொண்டு தகவல்கள் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க காடுகள் அமைப்பு மரங்கள் தான் இயற்கையான கார்பன் குறைப்பான் என்று கூறியுள்ளது.

மூலக்கதை