2020ல் எழுத முடியாதவர்களுக்காக சிவில் சர்வீஸ் தேர்வை மீண்டும் நடத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி

தினகரன்  தினகரன்
2020ல் எழுத முடியாதவர்களுக்காக சிவில் சர்வீஸ் தேர்வை மீண்டும் நடத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி

புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளை மீண்டும் ஒருமுறை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் கடந்தாண்டு  மே மாதம் நடத்தப்பட இருந்தது. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக 5 மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதில் முதல்நிலைத் தேர்வு 2020 அக்டோபர் 4ம் தேதியும், பிரதான தேர்வு 2021 ஜனவரி 8 மற்றும் 17ம் தேதிகளில்  நடத்தப்பட்டது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்ததாலும், ஊரடங்கு காரணமாக பல மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக, இன்னொரு முறை தேர்வு  நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த முறை இதன் மீது விசாரணை நடந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான ெசாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இன்னொரு வாய்ப்பு வழங்குவது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது’ என்று தெரிவித்தார். இந்நிலையில், இந்த  வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வீல்கர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் கூடுதல் ெசாலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ ஆஜரானார். அப்போது அவர், ‘விண்ணப்பதாரர்களுக்கு போதுமான அவகாசம்  வழங்கும் விதமாக ஏற்கனவே, கால தாமதமாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதனால், 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை இன்னொரு முறை நடத்த முடியாது,’ என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, விசாரணையை இம்மாதம்  25ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ள நீதிபதிகள், அன்று இது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மூலக்கதை