ஆட்டம் காண்கிறது திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா: விரைவில் பாஜ.வில் இணைய வாய்ப்பு

தினகரன்  தினகரன்
ஆட்டம் காண்கிறது திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா: விரைவில் பாஜ.வில் இணைய வாய்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா அமைச்சரவையில் இருந்து மேலும் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் முறையாக  இம்மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜ தீவிரம் காட்டி வருகிறது.  மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது. இக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்,  முதல்வர் மம்தாவிற்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்த சுவேந்து அதிகாரி, சில மாதங்களுக்கு முன் பாஜ.வில் இணைந்தார். அவருடன் பல திரிணாமுல் எம்எல்ஏ.க்களும் பாஜ.வில் இணைந்தனர். இந்நிலையில், மம்தாவின்  அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக உள்ள  ராஜீப் பானர்ஜி, நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ஆனால், இதற்காக எந்த காரணத்தையும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிடவில்லை. இவர் விரைவில்  பாஜ.வில்  இணைவார் என தெரிகிறது.‘அவமதிப்பால் புண்பட்டேன்’ராஜினாமா செய்த பிறகு ஆளுநர் ஜெகதீப் தங்காரை சந்தித்து ராஜீப் பானர்ஜி பேசினார். பின்னர், அளித்த பேட்டியில், ‘‘கட்சிக்குள் உள்ள சில மூத்த தலைவர்கள் என்னை அவமானப்படுத்தி வந்தனர். இதனால், மிகவும் மனம் புண்பட்டேன். இதை  கட்சியின் தலைவர் மம்தாவிடமும் தெரிவித்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதனால், பதவி விலகினேன்,’’ என்றார்.

மூலக்கதை