கலாசார பாதுகாப்பு தீர்மானம் பாக்., மீது இந்தியா பாய்ச்சல்

தினமலர்  தினமலர்

நியூயார்க்:'ஹிந்து கோவில்களை இடித்துத் தள்ளும் பாக். அரசுக்கு ஐ.நா. கலாசார அமைதிக்கான தீர்மானத்தைவழிமொழிய தகுதியில்லை' என இந்தியா காட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முயற்சியால் உலகளவில் வழிபாட்டு தலங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை கண்டிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது.'அனைத்து நாடுகளும் கலாசார பாரம்பரிய வழிபாட்டு தலங்களை பாதுகாத்து சிறுபான்மையினர் உரிமையை காக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டு உள்ளது.

முன்னதாக பாக். உள்ளிட்ட 21 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வழி மொழிந்தன. இதையடுத்து இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:ஆப்கனில் பல ஆண்டுகளுக்கு முன் பிரசித்தி பெற்ற புத்தர் சிலை பயங்கரவாதிகளால் சீரழிக்கப்பட்டது. குருத்வாரா குண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் 25 சீக்கியர்கள் உயிரிழந்தனர்.

இந்த வேதனைமிக்க சம்பவங்கள் இன்றும் நினைவில் உள்ளன.சமீபத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஹிந்து கோவில் பாகிஸ்தானில் தீ வைக்கப்பட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களது வழிபாட்டு தலங்கள் பிற மத தலங்களாக மாற்றப்படுகின்றன.

இத்தகைய சூழலில் ஐ.நா. பொதுச் சபையின் கலாசார அமைதியை பாதுகாக்கும் தீர்மானத்தை பாக். வழிமொழிந்திருப்பது முற்றிலும் முரண்பட்ட செயல். பாக். போன்ற நாடுகளின் செயல்பாடுகளுக்கு ஐ.நா. தீர்மானம் ஒரு அரணாக அமைய இடம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை