வெள்ளை மாளிகையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கை

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கொரோனா பரிசோதனை மற்றம் தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.

தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையிலும் இங்கு கொரோனா பரவல் குறையவில்லை. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்த போது வெள்ளை மாளிகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்பட்டன. முககவசம் அணிவதை டிரம்ப் தவிர்த்தார். வெள்ளை மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளும் ஊழியர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்பட்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் சமீபத்தில் பதவியேற்றார். இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணிந்தே அலுவலகத்துக்கு அதிபர் பைடன் வருகிறார். வெள்ளை மாளிகைக்கு வருபவர்களிடம் உடல் வெப்ப நிலை பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படுகிறது. முககவசம் அணியாதவர்களுக்கு வெள்ளை மாளிக்கைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

வெள்ளை மாளிகை ஊழியர்கள் பலரும் வீட்டிலேயே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 'இ மெயில்' அல்லது மொபைல் மூலம் தொடர்பு கொள்ளப்படுகின்றனர். பைடன் அலுவலகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் போடப்பட்டுள்ளன.கடும் கட்டுப்பாடுகொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு பைடன் அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இது தொடர்பாக அதிபர் பைடன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:கொரோனாவுக்கு நான்கு லட்சம் அமெரிக்கர்கள் பலியாகியுள்ளனர். இது இரண்டாம் உலகப் போரில் பலியானவர்களை விட அதிகம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் யாரும் அலட்சியம் காட்டக் கூடாது. இன்னும் 100 நாட்களுக்கு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கொரோனாவை ஒழித்துவிடலாம்.

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விமானத்தில் ஏறுவதற்கு முன் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை அவர்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் அமெரிக்கா வந்தபின் அவர்கள் 14 நாட்கள் தங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை