ஐநா முடிவுக்கு இந்தியா எதிர்ப்பு அமலுக்கு வந்தது அணு ஆயுத தடை

தினகரன்  தினகரன்
ஐநா முடிவுக்கு இந்தியா எதிர்ப்பு அமலுக்கு வந்தது அணு ஆயுத தடை

ஜெனீவா: அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது சட்ட விரோதம் என்றும், இந்த சர்வதேச சட்டம் நேற்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஐநா அறிவித்துள்ளது.  இரண்டாம் உலகப் போரின் முடிவில் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுத தாக்குதலால் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் பேரழிவை எதிர்கொண்டன. இதனால், சமூக செயற்பாட்டாளர்கள் அணு ஆயுதங்களை தடை செய்ய வேண்டும்  என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான முயற்சிகளையும் ஐநா தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. பல நாடுகளின் ஒருமித்த கருத்தால் கடந்த 2017ம் ஆண்டு இதற்காக சிறப்பு தீர்மானம் கொண்  வரப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு 120 நாடுகள் ஆதரவளித்தன. எனினும், அணு ஆயுதங்களை அதிகம் உற்பத்தி செய்யும் இந்தியா மற்றும்  வல்லரசு நாடுகள் 9 மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. எனினும், வல்லரசு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  இது குறித்து ஐநா பொதுச் செயலாளரான ஆன்டானியோ கட்டர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ செய்திக் குறிப்பில், ‘அணு ஆயுதங்களின் வளர்ச்சி மிகவும் அபாயகரமாக இருக்கிறது. இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மனித குலத்துக்கும்,  சுற்றுச்சூழலுக்கும் பேரழிவைத் தரக்கூடிய அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். சர்வதேச அணு ஆயுத தடையானது ஜனவரி 22ம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, இனி அணு ஆயுதங்கள் வைத்திருப்பது  சட்டப்படி குற்றம்,’’ என்று கூறியுள்ளார்.எதிர்க்கும் நாடுகள்இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஐநா.வின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அணு ஆயுதங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான ஜப்பானும்  ஐநா.வின் முடிவை ஒப்புக் கொள்ளவில்லை.

மூலக்கதை