‛ஆட்ட நாயகன்’ ரிஷாப் பன்ட் | ஜனவரி 19, 2021

தினமலர்  தினமலர்
‛ஆட்ட நாயகன்’ ரிஷாப் பன்ட் | ஜனவரி 19, 2021

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் அசத்திய இந்தியாவின் ரிஷாப் பன்ட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

பிரிஸ்பேனில் நடந்த 4வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்தியாவின் ரிஷாப் பன்ட் 89 ரன் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் இவருக்கு இப்போட்டியில் சிறந்த வீரருக்கான ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

1000 ரன்கள்

இந்தியாவின் ரிஷாப் பன்ட், தனது 2வது ரன்னை எட்டிய போது டெஸ்ட் அரங்கில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை அடைந்தார். இவர், 27 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்கள் எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன், தோனி 32 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்திருந்தார்.

இதுவரை பன்ட், 16 டெஸ்டில் (27 இன்னிங்ஸ்) 2 சதம், 4 அரைசதம் உட்பட 1088 ரன்கள் எடுத்துள்ளார்.

89 ரன்

இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவின் ரிஷாப் பன்ட், 89 ரன் விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (149*, எதிர்: பாகிஸ்தான், இடம்: ஹோபர்ட், 1999) உள்ளார்.

426 ரன்கள்

 

அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் லபுசேன் முதலிடம் பிடித்தார். இவர், 4 டெஸ்டில், ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 426 ரன்கள் குவித்தார். அடுத்த இரு இடங்களை முறையே ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (313 ரன், 4 டெஸ்ட்), இந்தியாவின் ரிஷாப் பன்ட் (274 ரன், 2 அரைசதம்) கைப்பற்றினர்.

 

 

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதலிடம் பிடித்தார். இவர், 4 டெஸ்டில், 21 விக்கெட் சாய்தார். அடுத்த இரு இடங்களை முறையே ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (17 விக்கெட், 4 டெஸ்ட்), இந்தியாவின் முகமது சிராஜ் (13 விக்கெட், 3 டெஸ்ட்) ஆகியோர் கைப்பற்றினர்.

 

 

இளம் துவக்க வீரர்

அபாரமாக ஆடிய சுப்மன் கில் 91 ரன் விளாசினார். இதன்மூலம் குறைந்த வயதில் (21 ஆண்டு, 133 நாட்கள்) 4வது இன்னிங்சில் 50 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த இந்திய துவக்க வீரரானார்.

இதற்கு முன், கவாஸ்கர் இச்சாதனை படைத்திருந்தார். கடந்த 1970–71ல் விண்டீசுக்கு எதிரான அறிமுக டெஸ்டில் இவர் (21 ஆண்டு, 243 நாட்கள்), 67 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

முதல் வெற்றி

பிரிஸ்பேன், காபா மைதானத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது. இதுவரை இங்கு  விளையாடிய 7 டெஸ்டில் இந்தியா ஒரு வெற்றி, ஒரு ‛டிரா’, ஐந்து தோல்வியை பெற்றது.

மூலக்கதை