ரிஷாப் பன்ட் ‛நம்பர்–13’: டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் | ஜனவரி 20, 2021

தினமலர்  தினமலர்
ரிஷாப் பன்ட் ‛நம்பர்–13’: டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் | ஜனவரி 20, 2021

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரிஷாப் பன்ட், முதன்முறையாக 13வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரிஷாப் பன்ட், 691 புள்ளிகளுடன் முதன்முறையாக 13வது இடத்துக்கு முன்னேறினார். பிரிஸ்பேன் டெஸ்டின் 2வது இன்னிங்சில் 89 ரன் விளாசிய இவர், ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன்மூலம் டெஸ்ட் தரவரிசையில் சிறந்த விக்கெட் கீப்பரானார். இவரை அடுத்து, தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக், 15வது இடத்தில் உள்ளார்.

இலங்கைக்கு எதிராக இரட்டை சதமடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (783 புள்ளி), 5வது இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடங்களில் முறையே நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (919 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (891) நீடிக்கின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 21 விக்கெட் வீழ்த்தி, தொடர் நாயகன் விருது வென்ற ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (908), ‛நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார்.

மூலக்கதை