முடியலையே... பாண்டிங் புலம்பல் | ஜனவரி 20, 2021

தினமலர்  தினமலர்
முடியலையே... பாண்டிங் புலம்பல் | ஜனவரி 20, 2021

 மெல்போர்ன்: இந்திய அணியிடம் இரண்டாவது முறையாக ‘பார்டர்–கவாஸ்கர்’ கோப்பையை பறி கொடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு, பாண்டிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, கடந்த 2018–19ல் போல, மீண்டும் சாதித்து டெஸ்ட் தொடரை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியது:

கடந்த ஆறு வாரத்தில் அணியின் இந்திய அணி கேப்டன், முதல் டெஸ்ட் போட்டியுடன் சென்று விட்டார். முக்கிய வீரர்கள் அனைவரும் காயமடைந்தனர். ஒட்டுமொத்தமாக 20 பேர் இந்திய அணியில் களமிறங்கினர். முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய ‘ஏ’ அணி போலத் தான் இத்தொடரில் பங்கேற்றது.

இருப்பினும் சொந்தமண்ணில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாதது அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த தொடரில் 2018–19 ல் இந்தியா கோப்பை வென்ற போது, நமது அணியில் வார்னர், ஸ்மித் இல்லை என்றோம். ஆனால் இம்முறை அப்படியல்ல, முன்னணி வீரர்கள் அனைவரும் இருந்தனர். ஆஸ்திரேலியா முழு பலத்துடன் விளையாடியது.

இருப்பினும் தொடரை கோட்டை விட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஏனெனில், இந்திய அணி பார்க்க எலும்பும் தோலுமாக காணப்பட்டது. கடைசியில் வலைப்பயிற்சியில் பந்து வீச அழைத்து வந்த வீரர்களை களமிறக்கி, வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி அந்தளவுக்கு பலவீனமாகி விட்டதை நினைத்து தான் கவலையாக உள்ளது.

இந்திய ‘ஏ’ அணியை விட நாம் மோசமாகி விட்டோம். இளம் வீரர்களை கொண்டு ஆஸ்திரேலிய மண்ணில் வெல்லும் திறமை அவர்களுக்கு உள்ளது. அதுவும் பிரிஸ்பேனில் சாதிக்கும் அளவுக்கு உள்ளனர். இப்படி நடந்திருக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

நன்றி நண்பா... * ஆஸி., கடிதம்

ஒருநாள், ‘டுவென்டி–20’, டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,), ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு (சி.ஏ.,) நன்றி தெரிவித்து கடிதம் எழுதியது. இதில்,‘உலகளாவிய பெருந்தொற்று நேரத்திலும், சர்வதேச பயணத்தின் சவால்களை கடந்து, லட்சக்கணக்கான மக்களின் முகத்தில் தேவையான நேரத்தில் புன்னகை கொண்டு வர உதவிய பி.சி.சி.ஐ.,யுடன், எப்போதும் நட்பு, நம்பிக்கை, நன்றியுடன் இருப்போம். 9 வாரங்கள் இரு அணி வீரர்கள் மூன்று வித போட்டிகளில் பங்கேற்றனர். சர்வதேச விளையாட்டு உலகின் துாதர் என்ற அந்தஸ்துக்கு ஏற்ப சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியது இந்தியா. இந்த சிறப்பான தொடரை நடத்த கைகொடுத்த பி.சி.சி.ஐ.,யில் உள்ள எங்களது நண்பர்கள் செய்த தியாகத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். துணச்சலாக செயல்பட்டு கோப்பை தக்கவைத்து, பல தலைமுறைகளாக பேசப்படும் வகையில் சாதித்த இந்திய அணியை வாழ்த்துகிறோம்,’ என தெரிவித்துள்ளது.

 

ஆஸி., கேப்டனுக்கு ‘கல்தா’

கடந்த 2018ல் டெஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் கேப்டன் ஆனார். இவரது தலைமையில் ஆஸ்திரேலியா பங்கேற்ற 23 டெஸ்டில் 11ல் தான் வென்றது. இரு முறை சொந்தமண்ணில் இந்தியாவிடம் கோப்பை இழந்தது. இதனால் பெய்ன் கேப்டன் பதவி பறிபோகும் எனத் தெரிகிறது.

முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,‘‘தோற்று விடுவோம் என்ற பயத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள், போட்டியை வெல்வதற்கு தேவையான கடினமான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்து விட்டனர் என நினைக்கிறேன். மழை காரணமாக 20 ஓவர்களை இழந்து விட்டோம் அல்லது கடைசி பந்தாகி விட்டது என்று சொல்வதெல்லாம் சரியல்ல. போட்டியில் நாம் வென்றிருக்க வேண்டும், கோப்பை கைப்பற்றி இருக்க வேண்டும்,’’ என்றார்.

 

வார்னர் ஏமாற்றம்

ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர் வார்னர் கூறுகையில்,‘‘இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாங்கள் மோசமாக விளையாடினோம். இதனால் தான் கோப்பை இழக்க நேரிட்டது,’’ என்றார்.

மூலக்கதை