அண்டங்கள் கண்டு வியக்கும் யார்க்கர் நாயகனே!: உள்ளூரில் உற்சாக வரவேற்பு

தினகரன்  தினகரன்
அண்டங்கள் கண்டு வியக்கும் யார்க்கர் நாயகனே!: உள்ளூரில் உற்சாக வரவேற்பு

சேலம்: ஆஸ்திரேலியா தொடரில்  சாதனை படைத்து, சொந்த ஊர் திரும்பிய யார்க்கர் நாயகன் நடராஜனுக்கு, அவரது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்.  ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். அப்போது  தனது யார்க்கர் பந்து வீச்சால், தலைசிறந்த வீரர்களை திணறடித்தார். அதனால் உள்ளூர் ரசிகர்கள் முதல்  உச்ச நட்சத்திரம் கபில்தேவ் வரை பலரையும் ஈரத்தார்.  அதனால் ஆஸி சென்ற இந்திய அணியுடன் வலைப் பயிற்சி பந்து வீச்சாளராக சென்றார். முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலக,  ஒருநாள், டி20, டெஸ்ட் என 3வகையான போட்டிகளிலும் வாய்ப்பு பெற்றார். திடீர் வாய்ப்பு என்றாாலும், துல்லியமாக பந்துகளை வீசி விக்கெட்களை அள்ளியதுடன், ரன் எடுக்கும் வேகத்தையும் கட்டுப்படுத்தினார்.  அதிலும் ஒருநாள் தொடரை இழந்த நிலையில், இந்திய அணி டி20 தொடரை வெல்ல யார்க்கர் கிங் நடராஜனின் பந்து வீச்சு பெரிதும் உதவியது.   கடைசி டெஸ்ட் வெற்றியிலும் நடராஜன் பங்களிப்பு முக்கியமானது. ஆஸியில் இருந்து அணியினருடன் நாடு திரும்பிய நடராஜன் நேற்று  பெங்களூருக்கு  விமானம் மூலம் வந்து சேர்ந்தார். பின்னர், காரில் தனது சொந்த ஊருக்கு மாலை  வந்தார். சேலம்-ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள சின்னப்பம்பட்டி சந்திப்புக்கு வந்தவுடன் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு தொடங்கியது. ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள், கிராம மக்கள் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர். இரட்டை குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் நடராஜனை ஏற்றினர்.  நண்பர்கள் வழங்கிய தேசிய கொடியை முத்தமிட்டு, உயர தூக்கி பிடித்தார்.  செண்டை மேளம் முழங்க, சாலையின் 2 பக்கங்களில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஊர்வலம் நடந்தது.   வீடு வந்தும் அவருக்கு தாயார் சாந்தா, தந்தை தங்கராஜ், மனைவி பவித்ரா, தம்பி சக்தி, சகோதரிகள் திலகவதி, தமிழரசி, மேகலா, நண்பர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட குடும்பத்தினர், ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதிகாரிகள் கெடுபிடி: கொரோனா ஊரடங்கு இருப்பதால், கிரிக்கெட் வீரர் நடராஜனை வரவேற்க கூட்டம் கூடக்கூடாது. ஊர்வலம் நடத்தக்கூடாது. பூங்கொத்து, சால்வை கொடுக்கக்கூடாது என மாவட்ட சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. கூடவே நடராஜஜை வரவேற்க அமைத்திருந்த மேடையையும் அகற்ற வைத்தனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்திருப்பதால், 14 நாட்கள் நடராஜன் தனிமையில்  இருக்க வேண்டும் என அவரது குடும்பத்தாரிடம் அறிவுறுத்தினர். ஆனால், கடைசி நேரத்தில் ஊர் பொதுமக்கள், ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால்,  ஊர்வலமாக செல்ல அனுமதித்தனர்.  குழந்தையுடன் கொஞ்சல்:  ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த போது நடராஜன்  மனைவி பவித்ராவுக்கு  பெண் குழந்தை பிறந்தது. ஐபிஎல் முடிந்ததும், குழந்தையை கூட பார்க்காமல் ஆஸ்திரேலியா சென்று விட்டார். அதனால் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு  குழந்தையை பார்க்க ஆவலுடன் நடராஜன் வந்தார்.  அதற்கு ஏற்ப, குழந்தையின் கையால் பூங்கொத்து கொடுக்க, மனைவி பவித்ரா ஆவலுடன் காத்திருந்தார். அந்த பூங்கொத்தை கொடுக்கக்கூடாது அதிகாரிகள் தடுத்து விட்டனர். பின்னர் வீட்டுக்குள் சென்றவர் விலகி நின்று  குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.

மூலக்கதை