அருணாச்சலம் அருகே புதிய கிராமம்: எங்கள் எல்லைக்குள் வீடு கட்டினால் என்ன தவறு: சீனா திமிர் பேச்சு

தினகரன்  தினகரன்
அருணாச்சலம் அருகே புதிய கிராமம்: எங்கள் எல்லைக்குள் வீடு கட்டினால் என்ன தவறு: சீனா திமிர் பேச்சு

பீஜிங்: அருணாச்சலில் வீடு கட்டிய விவகாரத்தில், ‘எங்கள் எல்லைக்குள் வீடு கட்டுவது சாதாரணமானது,’ என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள சாரி சூ ஆற்றங்கரை அருகே 101 வீடுகளுடன் சீனா புதிய கிராமத்தை உருவாக்கி இருக்கிறது. இதன் செயற்கைக்கோள் புகைப்படங்களை பிளானட் லேப் என்ற நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, கடந்த 2019 ஆகஸ்ட்டில் காலியாக இருந்த இடத்தில், 2020 நவம்பரில் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்களில் சீனா வீடு கட்டியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.இந்நிலையில், அருணாச்சலில் புது கிராமம் கட்டியிருப்பது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் நேற்று அளித்த பேட்டியில், ‘ஜாங்னான் பிராந்தியத்தில் (தெற்கு திபெத்) சீனாவின் நிலைப்பாடு உறுதியானது, தெளிவானது. அருணாச்சல் பிரதேசம் என்ற ஒன்றை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. எங்களின் சொந்த எல்லைக்குள் வளர்ச்சி, கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கமானது. இந்த வீடுகள் எங்கள் எல்லைக்குள் கட்டப்பட்டதில் என்ன தவறு. அது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது,’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை