தேவை : பதிவு வாகனங்களை ஆய்வு செய்ய கூடுதல் இட வசதி...அலைக்கழிப்பால் உரிமையாளர்கள், டீலர்கள் அவதி

தினமலர்  தினமலர்
தேவை : பதிவு வாகனங்களை ஆய்வு செய்ய கூடுதல் இட வசதி...அலைக்கழிப்பால் உரிமையாளர்கள், டீலர்கள் அவதி

விழுப்புரம்; விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்ய போதிய இடமில்லாததால், அதிகாரிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள், டீலர்கள் நீண்ட துாரமுள்ள வெளிப்பகுதியில் வாகனங்களை கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது.

விழுப்புரம், பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா, எஸ்.பி., அலுவலகம், அறநிலைய துறை அலுவலகம் உள்பட அனைத்து துறை அரசு அலுவலகங்கள் இயங்குகிறது. இங்கு, வட்டார போக்குவரத்து அலுவலகமும் இயங்குகிறது.இந்த அலுவலகத்தில், புதிய வாகனங்களுக்கு பதிவெண் வழங்குதல், லைசென்ஸ், விபத்தில் சிக்கும் வாகனங்களை சோதனை செய்து, பர்மீட் போன்ற சான்றுகள் வழங்கப்படுகிறது.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பதிவிற்கு வரும் வாகனங்களை அலுவலகத்தின் உள்ளே வரிசையாக நிறுத்தி, போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து எண்கள் வழங்குகின்றனர்.தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதன் தேவைகளும் விரிவடைந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட புதிய பைக்குகளுக்கு பதிவெண் வழங்கப்பட்டுள்ளது. அதே போல், விபத்தில் சிக்கிய 400க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்துள்ளனர். அது மட்டுமின்றி, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களுக்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதிய நான்கு சக்கர வாகனங்களுக்கு பதிவெண் வழங்குதல், பர்மிட் வாகனங்களை ஆய்வு செய்தல் போன்ற பணிகளுக்கு போதிய இடமில்லை.

இதனால், கடந்த 2005ம் ஆண்டு, அப்போதைய வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் மூலம், வட்டார போக்குவரத்து கழகத்திற்கு 2 ஏக்கர் இடத்தை ஒதுக்கி செய்து தரக்கோரி, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.ஆனால் நடவடிக்கை இல்லை. ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்ய போதிய இடமின்றி விழுப்புரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பாதிக்கின்றனர். இதற்காக இடத்தை ஒதுக்கி தர மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.முதலில் மாவட்ட போலீஸ் மைதானத்தில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, பிரச்னை எழுந்ததால், விராட்டிகுப்பம் பைபாஸ் சாலையோரத்திற்கும், பின்னர் ஜானகிபுரம் பைபாஸ் சாலையருகேவுள்ள இடத்திற்கும், இந்த பணியை மாற்றினர். தற்போது விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இரு சக்கர வாகனங்கள் பதிவு, லைசென்ஸ் வழங்கும் பணிகள் நடக்கிறது.நான்கு சக்கர வாகனங்களை சோதனை செய்ய இடமின்றி, எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள கோவிந்தபுரம் அருகேவுள்ள காலிமனை இடத்திற்கு மாற்றி அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.இங்கு, பெரும்பாலும் அதிகாரிகளை விட, வாகனங்களை வாங்கிவருவோரும், டீலர்களும் அதிகமாக அலைகழிக்கப்படுகின்றனர். நிரந்தர தீர்வு காண, விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நிரந்தர இடம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகனங்களை சோதனை செய்ய ஏழு ஏக்கர் தேவைவிழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு, தற்போது நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்களை ஆய்வு செய்வதற்கு பெரிய பரப்பளவு இடம் தேவைப்படுகிறது. இதற்காக, 7 ஏக்கர் இடத்தை ஒதுக்கி செய்து தரக்கோரி, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்தளவு இடம் அருகாமையில் எங்குமில்லாததால், தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. விரைவில் அரசு அதற்கான இடத்தை ஒதுக்கி தரும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை