மூழ்கியது பாலம்! காந்தை ஆற்றில் மீண்டும் பரிசல் பயணம்:லிங்காபுரம்- காந்தவயல் மக்கள் அவதி

தினமலர்  தினமலர்
மூழ்கியது பாலம்! காந்தை ஆற்றில் மீண்டும் பரிசல் பயணம்:லிங்காபுரம் காந்தவயல் மக்கள் அவதி

மேட்டுப்பாளையம்;லிங்காபுரம் - காந்தவயல் இடையே, காந்தை ஆற்றின் குறுக்கே கட்டிய பாலம் தண்ணீரில் மூழ்கியதால் மீண்டும் பரிசல் போக்குவரத்து தொடங்கியுள்ளது.சிறுமுகை அடுத்த லிங்காபுரம் அருகே, காந்தை ஆற்றின் குறுக்கே, 2005ம் ஆண்டு, 20 அடிக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
லிங்காபுரம் விவசாயிகள், 'பவானிசாகர் அணையில், 92 அடிக்கு நீர் மட்டம் உயரும் போது, இந்த பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். அதனால், 30 அடிக்கு உயர்த்தி கட்ட வேண்டும்' என்று, கோரினர்.அப்போதைய அரசு அதிகாரிகளும், ஒப்பந்ததாரரும், விவசாயிகள் கருத்தை ஏற்காமல், தங்கள் முடிவுப்படியே பாலத்தை கட்டினர்.
இப்படி கட்டிய பாலத்தால், உள்ளூர் மக்களுக்கு பயன் எதுவும் இல்லை. அணையில் 92 அடிக்கும் அதிகமாக தண்ணீர் இருக்கும் காலங்களில், இந்த பாலம் மூழ்கியே இருக்கிறது. வேறு வழியில்லாத நிலையில், காந்தையூர், காந்தவயல், உளியூர், ஆளூர், மொக்கை மேடு, லிங்காபுரம் மக்கள், பரிசலில் சென்று வருகின்றனர்.கடந்த, 16 ஆண்டுகளில், எட்டு முறை பவானிசாகர் அணை நிரம்பியது. ஒவ்வொரு முறையும், குறைந்தபட்சம் 5 மாதம் வரை, இந்த பாலம் தண்ணீரில் மூழ்கி இருந்தது. தண்ணீர் மட்டம் குறைந்தால் மட்டுமே, பாலம் பயன்படுத்த முடியும்.
கடந்த இரண்டு மாதங்களாக, அணை நீர்மட்டம், 90 அடிக்கு கீழே குறைந்தது. பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் பாலத்தில் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக, நீர்வரத்து கணிசமாக இருப்பதால் அணை நீர்மட்டம் உயர்ந்து விட்டது.தற்போது அணை நீர்மட்டம், 98 அடி என்ற அளவில் இருப்பதால் காந்தை ஆறு பாலம் தண்ணீரில் மூழ்கி விட்டது. பாலத்தின் மீது, 3 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. 'இந்த பிரச்னைக்கு எப்போது தான் தீர்வு ஏற்படுமோ' என்று புலம்பியபடியே, பொதுமக்கள், பரிசல் பயணத்தை மீண்டும் துவக்கியுள்ளனர்.

மூலக்கதை