'டபுள்!'ஆயத்த ஆடை ஏற்றுமதியை இருமடங்காக்க முடியும்

தினமலர்  தினமலர்
டபுள்!ஆயத்த ஆடை ஏற்றுமதியை இருமடங்காக்க முடியும்

திருப்பூர்:அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன், வரியில்லா ஒப்பந்தம் மேற்கொண்டால், ஆயத்த ஆடை ஏற்றுமதியை இருமடங்காக்க முடியும்'' என்று, மெய்நிகர் கண்காட்சி தள துவக்க விழாவில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் கூறினார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), இந்திய ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக, மெய்நிகர் கண்காட்சி தளத்தை உருவாக்கியுள்ளது.அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், நேற்று முதல் செயல்படத் துவங்கியது.நேற்று, ஆன்லைனில் நடந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, கண்காட்சி தளத்தை துவக்கிவைத்து பேசுகையில், 'உலக அளவில், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி பங்களிப்பு, ஐந்து முதல் ஆறு சதவீத அளவிலேயே உள்ளது. இந்த ஏற்றுமதி பங்களிப்பை, இரட்டை இலக்க நிலையை அடையச் செய்யவேண்டும்.வங்கதேசம், சீனா போன்ற நாடுகள், இந்தியாவிலிருந்து, அதிகளவு நுால் இறக்குமதி செய்கின்றன.
அந்நாடுகள், மதிப்பு கூட்டு ஆடைகளை உற்பத்தி செய்து, குறைந்த விலைக்கு சந்தைப்படுத்தி, வர்த்தகத்தை வசப்படுத்தி வைத்துள்ளன,' என்றார்.அமைச்சர் பெருமிதம்மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், ''இந்திய ஆயத்த ஆடை உற்பத்தி துறை, கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்ட, இக்கட்டான சூழலில், ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முழு கவச ஆடைகளை உற்பத்தி செய்து, உலக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.ஏ.இ.பி.சி., உருவாக்கியுள்ள மெய்நிகர் கண்காட்சி தளம், இந்திய ஆடை ஏற்றுமதி துறைக்கு, புதிய வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத்தரும்; குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்களுக்கான வர்த்தக மையங்களை கண்டறிய, உதவிக்கரம் கிடைத்துள்ளது'' என்றார்.
ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசுகையில், ''இந்திய அரசு, அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் விரைவில், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இதன்மூலம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை, மிக எளிதாக, இருமடங்கு உயர்த்தமுடியும்,'' என்றார்.ஏ.இ.பி.சி.,யின் ஏற்றுமதி பிரிவு தலைவர் சுதிர் ஷேக்ரி, நன்றி கூறினார். திருப்பூர், கோவை, டில்லி, மும்பை உட்பட நாடுமுழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், ஆன்லைனில், பார்வையிட்டனர்.

மூலக்கதை