ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:''நாட்டின் ஒற்றுமைக்காகவும், சவால்களை சமாளிப்பதற்காகவும், உறுதியுடன் பணியாற்றுவேன்,'' என, அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க துணை அதிபராக, இந்தியாவை பூர்விகமாக உடைய கமலா ஹாரிஸ் நேற்று முன் தினம் பதவியேற்றார். அவர் கூறியதாவது: நாட்டின் ஒற்றுமைக்காகவும், தேசம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கவும், உறுதியுடன் பணியாற்றுவேன். 'சூப்பர் ஹீரோ'க்களாக வளர வேண்டும் என கனவு காணும், சிறுவர் - சிறுமியருக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன்.

சூப்பர் ஹீரோக்கள், நம்மிடையேதான் உள்ளனர். அவர்கள் தான் ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்கர்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. அமெரிக்காவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கியவர், ஆப்ரஹாம் லிங்கன். நான் இந்த பதவியை அடைந்ததற்கு, நான் பார்த்த, பழகிய கறுப்பின பெண்கள் தான் காரணம்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடுபடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார். 'தாயின் நம்பிக்கையே காரணம்'அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: பல லட்சம் அமெரிக்கர்களின் கதை தான், என் கதை. என் தாய் சியாமளா கோபாலன், புற்றுநோய் ஆராய்ச்சியாளர் என்பதுடன். மக்கள் உரிமைக்காக போராடியவர். அவரை முன் உதாரணமாக வைத்துத் தான், வாழ்ந்து வருகிறேன்.

என்னையும், என் சகோதரி மாயாவையும், மிகவும் பொறுப்புடன் வளர்த்தார். 'நாம் முதலிடத்தில் இல்லாமல் இருந்தாலும், நிச்சயம் கடைசி இடத்தில் இருக்கக் கூடாது' என வலியுறுத்தினார்.இந்த பதவியை நான் அடைந்ததற்கு, என் மீது அவர் வைத்த நம்பிக்கை தான் காரணம்.

என் தாய், தன், 19 வயதில் அமெரிக்காவுக்கு வந்தார். அவர் அப்போது, இப்படி ஒரு நிகழ்ச்சியை கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார். எனினும், அமெரிக்காவில் இது போன்ற நிகழ்வுக்கு வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை, அவரிடம் இருந்தது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை