அமெரிக்கா - இந்தியா நல்லுறவு முன்னாள் துாதர்கள் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
அமெரிக்கா  இந்தியா நல்லுறவு முன்னாள் துாதர்கள் நம்பிக்கை

வாஷிங்டன்:'சீனாவின் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், இந்திய - அமெரிக்க நல்லுறவு மேலும் வலுவடையும்' என, முன்னாள் துாதர்கள் மற்றும் பாதுகாப்பு துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்ற பின், வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனி பிளின்கென், ஆசியா குறித்த அரசின் நிலைப்பாடு பற்றி பேசியதாவது:இந்தியா, தன் செயல்பாடுகளால், அமெரிக்க எம்.பி.,க்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. ஆனால், சீனாவின் சர்வாதிகாரமான போக்கு, அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்திய - பசிபிக் பிராந்தியம் மற்றும் தென் சீனக் கடல் பகுதி ஆகியவற்றில் ஆதிக்க மனப்பான்மையுடன் சீனா நடந்து கொள்கிறது. அதனால், சீனா விஷயத்தில், அமெரிக்காவின் நிலை, கடுமையானதாகவே இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

அமெரிக்காவிற்கான இந்தியாவின் முன்னாள் துாதர் அருண் சிங் கூறியதாவது:சீனாவின் கடுமையான சவால்களை இந்தியா எதிர்நோக்கி வருகிறது. சீனாவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், ராணுவ பலம் அதிகரித்து வருவது, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், சீனாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில், இந்தியா - அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

வெளியுறவு விவகாரங்கள் துறை நிபுணர், ஜி.பார்த்தசாரதி, ராணுவ முன்னாள் துணை தளபதி சுப்ரதா சாஹா, அமெரிக்க முன்னாள் துாதர் கென்னத் ஜஸ்டர் ஆகியோரும், இரு நாடுகளின் நல்லுறவு மேலும் வலுவடைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். எம்.பி.,க்கள் பாராட்டுஅமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் தலைமைக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, அமி பெரா, பிரமீளா ஜெயபால் உள்ளிட்ட எம்.பி.,க்கள், மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை