அடிப்பட்ட இடங்களில் எல்லாம் நான் முத்தம் கொடுப்பேன்...! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய புஜாராவின் மகள்

தினகரன்  தினகரன்
அடிப்பட்ட இடங்களில் எல்லாம் நான் முத்தம் கொடுப்பேன்...! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய புஜாராவின் மகள்

டெல்லி: அப்பாவுக்கு அடிப்பட்ட இடங்களில் எல்லாம் நான் முத்தம் கொடுப்பேன் என்று இந்திய பேட்ஸ்மேன் புஜாராவின் மகள் அதிதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இந்தியா வெற்றிப்பெற்று வரலாற்று சாதனைப்படைத்தது. அதுவும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் புஜாரா, சுப்மன் கில்லுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகவும் சிறப்பாக விளையாடினார். புஜாராவின் மன உறுதியான பேட்டிங்கை கண்டு ஆஸ்திரேலிய பவுலர்கள் எரி்ச்சலடைந்தனர். அதனால் அவருக்கு சரமாரியாக பவுன்சர்கள் போடப்பட்டது. இதில் பல பவுன்சர்களை தனது உடலில் தாங்கி காயமடைந்தார். ஆனால் இந்த வலிகளை பொறுத்துக்கொண்டு அவர் அரை சதமடித்தார். இந்த அரைசதம் புஜாராவின் மன உறுதி மட்டுமல்லாமல், இந்திய அணியின் தீரத்தை காட்டியதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இது குறித்து \'தி இந்தியன் எக்ஸ்பிரஸில்\' பகிர்ந்துக்கொண்ட புஜாரா \'எப்போதெல்லாம் என் மகள் கீழே விழுகிறாளோ அப்போதெல்லாம் காயமடைந்த இடத்துக்கு நான் முத்தம் கொடுப்பேன். எனவே என் மகளும் முத்தம், காயங்களை ஆற்றும் என நம்புகிறாள்\' என்றார். புஜாரா பவுன்சர்கள் காரணமாக காயமடைந்தபோது அவரின் மகள் அதிதி \'அப்பா வீட்டுக்கு வந்ததும் அவர் காயமடைந்த இடங்களில் நான் முத்தம் கொடுப்பேன், அவருக்கு சரியாகிவிடும்\' என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்த புஜாரா \'கிரிக்கெட்டின் தொடக்க காலத்தில் இருந்தே நான் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை. வலியை தாங்கிக்கொள்வேன், அதுவே எனக்கு பழகிவிட்டது. கிரிக்கெட்டில் அடிப்படுவது இயல்புதானே\' என புஜாரா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை