வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் கேபிடாலில் கோலாகலமாக நடந்த விழாவில் நேற்று பதவியேற்றனர். அப்போது, அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’ என்று ஜோ பிடன் கூறினார்.

உலகின் மிகவும் வலிமையான வல்லரசான அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 306 எலக்டோரல் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.

துணை அதிபராக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வென்றார். 4 ஆண்டாக பல்வேறு சர்ச்சைகளுடனும், சாதனைகளுடனும் ஆட்சி செய்த அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான டிரம்ப் 232 வாக்குகளுடன் தோல்வியை தழுவினார்.தோல்வியை ஒப்பு கொள்ளாத டிரம்ப், பல்வேறு நீதிமன்ற படியேறியும் பிடனின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இந்த வெற்றியை எதிர்த்து, கடந்த 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இது உலகளவில் கடுமையாக கண்டிக்கப்பட்டது.

இதனால், பெருத்த அவப்பெயருடன் தனது தோல்வியை டிரம்ப் ஒப்பு கொண்டார். அமெரிக்க அரசியலமைப்புபடி பல்வேறு நடைமுறைகளுக்கு பின், தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டரை மாதங்களுக்கு பிறகு புதிய அதிபர், துணை அதிபர் பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிடால் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்ததால், வாஷிங்டனில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தலால், உலக தலைவர்கள் அழைக்கப்படவில்லை.

அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யு புஷ், பாரக் ஒபாமா உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றனர். பதவியில் இருந்து வெளியேறும் டிரம்ப், பதவியேற்பு விழாவை புறக்கணித்து பாரம்பரிய வழக்கத்தை உடைத்தெறிந்தார்.

உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் பிரார்த்தனையுடன் விழா தொடங்கியது. பிற்பகல் 12 மணியளவில் பிடன் அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார்.78 வயதாகும் இவர், அமெரிக்காவின் வயதான அதிபர். 127 ஆண்டு பழமையான தனது குடும்பத்தின் பைபிளை வைத்து தனது மனைவி ஜில் பிடனுடன் அதிபர் பிடனும் பதவி பிரமாணம் ஏற்றார்.

அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி, கறுப்பின தெற்காசியாவை சேர்ந்த துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.

பதவியேற்று கொண்ட பின்னர் ஜோ பிடன், மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு: இன்று அமெரிக்காவின் நாள், ஜனநாயகத்தின் நாள். அமெரிக்காவின் வரலாறு பல்வேறு போராட்டங்கள் நிறைந்தது.

அமெரிக்காவில் பல அழுத்தங்களை கடந்து மக்களாட்சி நீடித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்தான் மக்களாட்சியை வன்முறை ஆட்டி படைத்தது.

கொரோனா வைரஸ் ஏராளமானோரின் உயிரை பறித்துள்ளது. லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது.

உள்நாட்டு பயங்கரவாதம் வெள்ளையின வாதம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். நாட்டை ஒன்றிணைக்க ஒட்டு மொத்த மக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஒற்றுமையுடன் இருந்தால் எக்காலத்திலும் தோல்வியை சந்திக்க மாட்டோம். ஒற்றுமை இல்லாமல் அமைதி நிலைக்காது.


வருங்காலத்தில் அமெரிக்கா சிறப்பான நாடாக திகழும். மார்ட்டின் லூதர் கிங்கின் கனவுகளை இந்த தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் இணக்கமாகவும் இருக்க வேண்டும்.

அமெரிக்க மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும், என்னை எதிர்த்தவர்களுக்கும் அதிபராகவே நான் இருப்பேன். வரலாறு, உண்மை, நம்பிக்கை, போன்றவை ஒற்றுமைக்கான வழிகளை காட்டுகின்றன.

இந்த தருணத்தில் ஒற்றுமை மிகுந்த அமெரிக்கர்களாக இருப்போம். அமெரிக்கா ஒரு அக்னி பரீட்சையை கடந்து வந்துள்ளது.

ஒற்றுமைதான் முன்னேற்றத்திற்கான வழி. நமக்கும் நமது குழந்தைகளுக்கும் சிறந்த உலகத்தை காட்டுவோம்.

பெருந்தொற்று வன்முறையை ஒழிக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம். கடினமான தருணங்களை எப்படி கடக்கிறோம் என்பதை கொண்டுதான் நாம் மதிப்பிடப்படுகிறோம்.

அமெரிக்க குடும்பங்களுக்கு தைரியமான நடவடிக்கை மற்றும் உடனடி நிவாரணம் வழங்கும் வேலைக்கான உரிமையை பெறுவதற்காக நான் ஓவல் அலுவலகத்திற்கு செல்கிறேன்.

அரசியலமைப்பை பாதுகாப்பேன், ஜனநாயகத்தை பாதுகாப்பேன், அமெரிக்காவை காப்பாற்றுவேன். நான் செய்யும் எல்லாவற்றையும் உங்கள் சேவையில் வைத்திருப்பேன்.

எங்களை பிளவுபடுத்தும் சக்திகள் ஆழமானவை என்பதை அறிவேன். அவை உண்மையானவை.

ஆனால் அவை புதியவை அல்ல என்பதையும் அறிவேன். எனது முழு ஆத்மாவும் இந்த ஜனவரி நாளில் உள்ளது.

அமெரிக்காவை ஒன்றிணைத்தல், நம் மக்களை ஒன்றிணைத்தல், நம் தேசத்தை ஒன்றுபடுத்துதல். இந்த வெற்றி ஒரு வேட்பாளரின் வெற்றி அல்ல.ஜனநாயகத்தின் வெற்றியாக கொண்டாடுகிறோம். மக்களின் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜனநாயகம் விலைமதிப்பற்றது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், பிடனும், கமலாவும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர். ராணுவ இசை முழங்க வெள்ளை மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்ந்து அவர்கள் ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வுகள் அமெரிக்க டிவி சேனல்களிலும், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களிலும் நேரடியாக ஒளிரப்பு செய்யப்பட்டது.

பைடனுக்கும், கமலா ஹாரிசுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வெள்ளை மாளிகையில் ஜோ பிடன், தனது பணிகளை தொடங்கினார். பதவியேற்ற சில நிமிடங்களிலேயே முதல் அரசாங்க ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் அறையில் இருந்து தனது அமைச்சரவை நியமனங்கள் மற்றும் சில பரிந்துரைகளை, துணை அமைச்சரவை அளவிலான பாத்திரங்களுக்கு ஜோ பிடன் முறைப்படுத்தினார். பதவியேற்பு தொடர்பான பிரகடனத்திலும் பிடன் கையெழுத்திட்டார். முன்னதாக இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.

அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், வெள்ளைமாளிகையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, கிளிண்டன், ஜார்ஜ் புஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவுக்காக ரூ. 320 கோடி செலவிடப்பட்டது.

இதில் அமெரிக்க தேசிய கீதத்தை லேடி காகா பாடினார். பின்னர் ஜெனிபர் லோபஸ் சிறப்பு பாடல் பாடினார்.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா 2009ல் பதவியேற்றபோது 20 லட்சம் பேர் பங்கேற்றனர். தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் 1000 பேர் மட்டுமே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பதிவில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பிடனுக்கு வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு பகிரப்பட்ட மதிப்புகளை அடிப்படையாக கொண்டது.இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஜோ பிடனுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதே போன்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் ஜஸ்டின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகோ உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் இணைந்தது
ஜோ பிடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளார் என வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி கூறினார். அவர் கூறுகையில், குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடையை நீக்குதல், பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், மக்களுக்கு பொருளாதார உதவி, டிரம்ப் நிர்வாகத்தில் தவறாக எடுக்கப்பட்ட முடிவுகளை திரும்ப பெறுதல் போன்றவை அந்த உத்தரவுகளில் உள்ளன.உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா, டிரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. நிதியுதவியையும் நிறுத்தியது.

மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் வெளியேறியது.

அந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்படும். உலக சுகாதார கூட்டத்திலும் அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும்.

புதிய வேலைவாய்புகள், பருவநிலை மாற்ற சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்பினத்தவர்கள், லாட்னோ, பூர்வீக அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள், 3ம் பாலினத்தவர்கள், எல்ஜிபிடி பிரிவினர், மதச்சிறுபான்மையினர் அனைவரையும் சமமாக நடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் அகதிகள் நுழையாத வகையில் ட்ரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுதவி உடனடியாக ரத்து செய்யப்படும் என ஜென் சகி கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற பின்னர் அதிபரின் அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ஜோ பிடன் தனது பணியை தொடங்கினார். அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே, பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை
அதிபராக பதவியேற்ற ஜோ பிடன், தனது ட்விட்டர் பதிவில், ‘நெருக்கடியை சந்திக்கும் இந்த தருணத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

எனவே, அதிபர் அலுவலகமான ஓவல் அலுவலகம் செல்கிறேன்.

அமெரிக்க மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.

.

மூலக்கதை