கடலூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்...ஒரு மாதத்தில் புதிதாக 59,015 பேர் சேர்ப்பு

தினமலர்  தினமலர்
கடலூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்...ஒரு மாதத்தில் புதிதாக 59,015 பேர் சேர்ப்பு

கடலுார்; மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.

அதனையொட்டி 2021 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.அதன்படி, கடந்த நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில், கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் 20 லட்சத்து 82 ஆயிரத்து 840 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.மேலும், பெயர் சேர்த்தல், திருத்தல் மற்றும் நீக்கம் செய்யும் பணி அன்றைய தினமே துவங்கியது. டிசம்பர் 15ம் தேதி வரை, அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகம், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் இப்பணி நடந்தது.மேலும், நவம்பர் 21, 22ம் தேதிகள் மற்றும் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதி சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து, நேற்று 2021ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வெளியிட்டார்.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டசபை தொகுதிகளில் 10 லட்சத்து 55 ஆயிரத்து 291 ஆண் மற்றும் 10 லட்சத்து 86 ஆயிரத்து 436 பெண், 208 இதர வாக்காளர்கள் உட்பட மொத்தம் 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.இதில், புதிதாக சேர்த்ததில், 67 ஆயிரத்து 660 பேர் இடம் பெற்றனர். மேலும், இடம் பெயர்வு மற்றும் இரட்டைப் பதிவு காரணங்களுக்காக 8,645 பேர் நீக்கப்பட்டனர்.அதன்படி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது, 59,095 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் அதிகபட்சமாக விருத்தாசலம் தொகுதியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 703 வாக்காளர்களும், குறைந்த பட்சமாக நெய்வேலியில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 888 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., (பொறுப்பு) கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிமளம், தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.விருத்தாசலம்விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, சப் கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டார்.சப் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், நேர்முக உதவியாளர் அரங்கநாதன், தாசில்தார்கள் சிவக்குமார், ரவிச்சந்திரன், தேர்தல் துணை தாசில்தார்கள் வேல்முருகன், ஜெயச்சந்திரன், வி.ஏ.ஓ., மாயகண்ணன் பங்கேற்றனர்.-------------------------

மூலக்கதை