அதிகம்: மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள்...புதிதாக 25,771 பேருக்கு ஓட்டுரிமை

தினமலர்  தினமலர்
அதிகம்: மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள்...புதிதாக 25,771 பேருக்கு ஓட்டுரிமை

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி நடைபெற்றது.கடந்த நவ., 16ம் தேதி முதல் டிச., 15ம் தேதி வரை நடைபெற்ற இப்பணியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உட்பட இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இறுதி வாக்காளர் பட்டியலை, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டார்.தொடர்ந்து அவர் கூறியதாவது: கடந்தாண்டு நவ., 16ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 8,17,519 ஆண்கள், 8,30,644 பெண்கள், மூன்றாம் பாலினம் 198 உட்பட மொத்தம் 16,48,361 பேர் இடம் பெற்றிருந்தனர்.இதையடுத்து நடந்த சுருக்க திருத்தப் பணியில், இறந்தோர், குடி பெயர்ந்தோர், இரு இடங்களில் பெயர் உள்ளோர் என ஆண்கள் 5,297 பேர், பெண்கள் 4,980 பேர், மூன்றாம் பாலினம் 9 பேர் என மொத்தம் 10,286 பேரின் பெயர் நீக்கப்பட்டு, 1,63,8075 வாக்காளர்கள் இருந்தனர்.அதேபோன்று ஆண்கள் 20,984 பேர், பெண்கள் 25,418 பேர், மூன்றாம் பாலினம் 27 பேர் என மொத்தம் 46,429 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதில், புதிய இளம் வாக்காளர்கள் 18-19 வயது பூர்த்தியடைந்தோர், மட்டும் 25,771 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் நியமன ஓட்டுச்சாவடிகளில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்கள் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணையம் இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்த விபரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த பணிகள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் வரும் 25, 27, 29 ஆகிய தினங்களில் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறவுள்ளது.

அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கவும், மாற்றுத்திறனாளிகள் என குறியீடு செய்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.அப்போது, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அ.தி.மு.க., பாஸ்கர், தி.மு.க., ஜெயச்சந்திரன், காங்., செல்வராஜ், தே.மு.தி.க., மணிகண்டன், பா.ஜ., சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை