முதலில் துட்டு... அப்புறம்தான் விளையாட்டு! நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற ....ஜி.எஸ்.டி.,யுடன் கட்டணம் வசூல்!

தினமலர்  தினமலர்
முதலில் துட்டு... அப்புறம்தான் விளையாட்டு! நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற ....ஜி.எஸ்.டி.,யுடன் கட்டணம் வசூல்!

 கோவை : கோவை, நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெறும் தடகள வீரர்களிடம், ஜி.எஸ்.டி., யுடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்ப அடிப்படை வசதி, விளையாட்டு உபகரணங்கள் கிடைப்பதில்லைஎன, புலம்பும் விளையாட்டு வீரர்கள், வசதியற்ற திறமைசாலிகளால், பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக வருந்துகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளின் விளையாட்டு போட்டிகள், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான தடகள போட்டிகள், பெரும்பாலும் நேரு ஸ்டேடியத்தில் தான் நடத்தப்படுகின்றன.வீரர்கள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், ஸ்டேடியத்தில் தான் பயிற்சி மேற்கொள்கின்றனர்.தினமும், 100க்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்சி பெற்று வருகின்றனர்.கட்டணம் வசூல்இந்நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சிந்தெடிக் மைதானம், உள்விளையாட்டு அரங்குகளில் பயிற்சி பெறும் வீரர்களிடம், மாத கட்டணம் வசூலிக்க வேண்டுமென, மாவட்ட விளையாட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 100 ரூபாயுடன் ஜி.எஸ்.டி., வரி, கல்லுாரி மாணவர்களுக்கு 150 ரூபாய், இதர பிரிவினருக்கு, 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.ஆனால், அதற்கேற்ப, மைதானத்தில் தரமான குடிநீர், கழிப்பறை வசதி, உடைமாற்றும் அறை எதுவும் இல்லை. மாலை நேரங்களில் ஸ்டேடியத்தில் விளக்கு போடுவதில்லை. செயற்கை ஓடுதளப் பாதை சேதமடைந்து காணப்படுகிறது. எந்த விளையாட்டு உபகரணங்களும் கிடைப்ப தில்லை என்பது, விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் பிரச்னையாக உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உணவு, புத்தகம், சீருடை, பஸ் போக்குவரத்து என, அனைத்து இலவசமாக கிடைக்கும் .

இந்த சூழ்நிலையில், விளையாட்டில்சாதனை படைக்க துடிக்கும் வீரர்களிடம், பயிற்சிக்காக ஜி.எஸ்.டி.,யுடன் கட்டணம் வசூலிக்கும் முடிவை அறிந்து கொந்தளிக்கின்றனர் விளையாட்டு வீரர்கள்.அவர்களில் சிலர் கூறுகையில்,'கடந்த பத்து ஆண்டுகளாக எந்த ஒரு குறையும் நிவர்த்தி செய்யவில்லை. அதிகாரிகள் மாறிக்கொண்டே உள்ளனர். ஆனால், ஸ்டேடியத்தின் அவல நிலை மாறவில்லை. கோவையில் சர்வதேச சாதனை படைத்த வீரர்கள் அதிகம் உள்ளனர்.இந்த தரமற்ற மைதானத்தில், பயிற்சி பெறுவதின் மூலம் பல வீரர்களுக்கு விபத்து ஏற்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், தேசிய போட்டிகளில் சாதனை படைக்கும் கோவை வீரர்களின் எண்ணிக்கை குறையும்.பயிற்சிக்கான கட்டணத்தொகையை, வங்கிக்கு சென்று வரையோலை மூலம் செலுத்த வேண்டும். தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களும், கட்டணம் செலுத்திதான் பயிற்சி பெறுகின்றனர். பணம் கொடுக்க தயாராக உள்ளோம். ஆனால், வசதிகள் இல்லையே. முதலில் வசதிகளை மேம்படுத்தட்டும்' என்று குமுறித் தீர்த்தனர். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள அமைச்சர் வேலுமணிதான், நம்மூர் இளைஞர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

'விரைவில் புதிய ஓடுதளம்!'மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், உறுப்பினர் செயலர் அலுவலக பெயரில் தான் வரையோலை எடுக்கப்படுகிறது. எங்களுக்கு எந்த ஒரு தொகையும் கிடைப்பதில்லை. குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளன. உடைமாற்று அறை அமைக்க, பொதுப்பணித் துறையிடம் ஒப்பந்த புள்ளி பெற்று, உறுப்பினர் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய ஓடுதளப்பாதை அமைக்க, அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அரசாணை வந்தவுடன் அமைக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை