23,52,785! சட்டசபை தொகுதியின் வாக்காளர்கள் ... வாக்காளர்களின் பட்டியலை வெளியிட்டது ஆணையம்

தினமலர்  தினமலர்
23,52,785! சட்டசபை தொகுதியின் வாக்காளர்கள் ... வாக்காளர்களின் பட்டியலை வெளியிட்டது ஆணையம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை, 23 லட்சத்து, 52 ஆயிரத்து, 785 ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தின், வரைவு வாக்காளர் பட்டியல், நவ., 16 ல் வெளியிடப்பட்டது.

எட்டு சட்டசபை தொகுதிகளில், 11 லட்சத்து, 42 ஆயிரத்து, 775 ஆண்கள்; 11 லட்சத்து 60 ஆயிரத்து,809 பெண்கள்; 258 திருநங்கைகள் என, 23 லட்சத்து, 3,842 வாக்காளர் இருந்தனர். அதனை தொடர்ந்து, பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடந்தன. அதன்படி, 70 ஆயிரத்து, 715 வாக்காளர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 21 ஆயிரத்து, 772 வாக்காளர் நீக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து, 444 பேர் திருத்தம் செய்துள்ளனர். ஒரே தொகுதிக்குள், 6,177 பேர் முகவரி மாற்றம் செய்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது. கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வாக்காளர் பட்டியலை, கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டார்.புதிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில், ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட உள்ளன. சட்டசபை தேர்தல் வர இருப்பதால், புதிய ஓட்டுச்சாவடி விவரத்தையும், கட்சிகளுக்கு அளிக்க வேண்டுமென, இந்திய கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் ரவி கோரிக்கை விடுத்தார்.கலெக்டர் பேசுகையில், ''மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை, 23 லட்சத்து, 52 ஆயிரத்து, 785 ஆக உயர்ந்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு, வாக்காளர் பட்டியல் அடங்கிய, 'சிடி' விரைவில் வழங்கப்படும். பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்; வாக்காளர், பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். தற்போதைய நிலவரப்படி, 18 வயது பூர்த்தியானவர், 'ஆன்லைன்' மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்,'' என்றார்.பல்லடத்தில் அதிகம்பல்லடம் தொகுதியில் அதிகபட்சமாக, 13 ஆயிரத்து, 181 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பூர் வடக்கில், 11 ஆயிரத்து, 391 பேர்; அவிநாசியில், 10 ஆயிரத்து, 522; திருப்பூர் தெற்கில், 8,734; காங்கயத்தில், 7,115; உடுமலையில், 7,588; மடத்துக்குளத்தில், 6,109; தாராபுரத்தில், 6,075 பேர் என, 70 ஆயிரத்து, 715 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக, தாராபுரத்தில், 4,863 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அடுத்து, உடுமலையில், 3,679 பேர்; அவிநாசியில், 3,095; மடத்துக்குளத்தில், 2,898; காங்கயத்தில், 2,442; பல்லடத்தில், 1,908; திருப்பூர் வடக்கில், 1,801; திருப்பூர் தெற்கில், 1,086 பேர் என, 21 ஆயிரத்து, 772 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.




மூலக்கதை