மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி...! ஜனவரி 22-ல் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 10ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி...! ஜனவரி 22ல் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் 57-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்தநிலையில்,வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற 9 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த சமரச முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மந்திரி தோமர் தலைமையில் 10-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மத்திய மந்திரிகளும் கலந்துகொண்டனர். மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வேத்துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். டெல்லி விஞ்ஞான் பவனில் சுமார் 3.30 மணி நேரமாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாததால் விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்சினையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனையடுத்து வரும் ஜனவரி 22-ம் தேதி விவசாயிகளுடன்  11-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திட்டமிட்டபடி குடியரசு தினத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பின் விவசாய சங்க தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஒன்றரை வருடங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கு பதிலளித்த விவசாயிகள், சட்டங்களை இடைநிறுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் தெளிவாக பதில் அளித்தோம் என்றார். அதனை தொடர்ந்து அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா கூறுகையில்; ஒன்றரை வருடங்களுக்கு சட்டங்களை அமல்படுத்தும் வகையில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாக அரசு கூறியது. விவசாயிகள் மீது என்.ஐ.ஏ பதிவு செய்துள்ள போலி வழக்குகளை திரும்பப் பெறுமாறு நாங்கள் அரசிடம் வலியுறுத்தினோம்.  இதற்கு பதிலளித்த அரசு, அவர்கள் இந்த விஷயத்தை கவனித்து வருவதாகவும், புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் எம்.எஸ்.பி மற்றும் சட்டங்கள் குறித்து ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அவர்கள் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக நாங்கள் நாளை ஒரு கூட்டத்தை நடத்த உள்ளோம். இந்த திட்டம் குறித்து ஒரு வித முடிவை எடுப்போம் என்றார்.

மூலக்கதை