முதலீட்டு விதிகளில் மாற்றம்: அமேசானுக்கு நெருக்கடி

தினமலர்  தினமலர்
முதலீட்டு விதிகளில் மாற்றம்: அமேசானுக்கு நெருக்கடி

புதுடில்லி:அன்னிய முதலீடுகள் குறித்த விதிமுறைகளை மாற்றி அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்பட்சத்தில், 'அமேசான்' உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என கருதப்படுகிறது.

மேலும், அவை தங்களுடைய விற்பனையாளர்களுடனான கூட்டை, மறுசீரமைக்க வேண்டிய நிலையும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அன்னிய முதலீட்டுக்கான விதிகளை மாற்றி அமைப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

அண்மைக்காலமாக, உள்நாட்டு சில்லரை விற்பனையாளர்கள், அமேசான், 'வால்மார்ட்' உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர்.வெளிநாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்கள், வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களை இணைக்கும் ஒரு சந்தையாக மட்டுமே செயல்பட இந்தியா அனுமதித்துஉள்ளது.

பொருட்களை சேர்த்து வைக்கவோ, அவற்றை நேரடியாக விற்பனைக்கு விடுக்கவோ அவற்றுக்கு அனுமதி கிடையாது.மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள், அவை நேரடியாக பங்கு முதலீடு செய்திருக்கும் விற்பனையாளர்களின் பொருட்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டது.

இப்போது அடுத்தகட்டமாக, இத்தகைய மின்னணு வர்த்தக நிறுவனங்கள், நேரடியாக இல்லாமல் மறைமுகமாக தங்களின் தாய் நிறுவனங்கள் மூலம் விற்பனையாளர்களின் பங்குகளை வைத்திருந்தாலும், அந்த தயாரிப்புகளை விற்பனை செய்யக்கூடாது என மாற்றம் செய்யப்பட உள்ளது.

இப்படி ஒரு மாற்றத்தை அரசு செய்யும்பட்சத்தில் அமேசான் மிகவும் பாதிக்கப்படும். காரணம், இந்நிறுவனம், இரண்டு மிகப் பெரிய, 'ஆன்லைன்' விற்பனையாளர்களின் பங்குகளை மறைமுகமாக வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, அமேசான் தரப்பில், 'அன்னிய முதலீடுகளில் பெரியளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், அது நாட்டின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை