போட்டியில் குதிக்கும் ‘டாடா’ குழுமம்

தினமலர்  தினமலர்
போட்டியில் குதிக்கும் ‘டாடா’ குழுமம்

புதுடில்லி:‘டாடா’ குழுமம், ‘பிக்பாஸ்கெட்’ மற்றும் ‘ஒன் மில்லிகிராம்’ ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளது.

காபியிலிருந்து, கார் வரை தயாரிக்கும், டாடா குழுமம், அதன் அத்தனை தயாரிப்புகளையும் ஒரே செயலி மூலமாக ஆன்லைனில் விற்பனை செய்யும் முடிவில் உள்ளது. இதன் பொருட்டு, ஆன்லைன் வினியோகத்தில் இருக்கும் சில நிறுவனங்களை கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, முதற்கட்டமாக, ஆன்லைன் மளிகை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பிக்பாஸ்கெட் நிறுவனத்தில், முதல்கட்டமாக, 1,450 – 1,825 கோடி ரூபாயை முதலீடு செய்து, அதன் பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல், ஆன்லைன் மருந்து வினியோகத்தில் ஈடுபட்டுள்ள, மும்பையைச் சேர்ந்த, ஒன் மில்லிகிராம் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

முகேஷ் அம்பானியின், ‘ஜியோ மார்ட்’ மற்றும் ‘அமேசான், பிளிப்கார்ட்’ ஆகியவற்றின் போட்டியை சமாளிக்கும் வகையில், பல நிறுவனங்களை கையகப்படுத்த, டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாகவே, இந்த இரு நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

பிக்பாஸ்கெட் டீலை பொறுத்தவரை, மொத்தம் 8,750 கோடி ரூபாய்க்கு கைமாறும் என, துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், பிக்பாஸ்கெட் நிறுவனத்தை கையகப்படுத்தியதும், அந்நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடவும், டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை