டாக்டர் சாந்தா சாந்தியடைந்தார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
டாக்டர் சாந்தா சாந்தியடைந்தார்

டாக்டர் சாந்தா சாந்தியடைந்தார்

     சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் வி.சாந்தா உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

     மக்சேசே விருது, பத்மஸ்ரீ, பத்மவிபூசன் போன்ற விருதுகளைப் பெற்ற மருத்துவர் வி. சாந்தா அவர்கள் மார்ச் 11, 1927ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரின் தாய்மாமா. சென்னை மருத்துவக்கல்லூரியில் 1949ம் ஆண்டு டாக்டர் பட்டமும், 1955ம் ஆண்டு எம்.டி. பட்டமும் பெற்றார். 1955ம் ஆண்டு அடையாறு புற்றுநோய் கழகத்தில் இணைந்த இவர் 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றினார். மகளிர் குல திலகம் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இலட்சக்கணக்கான நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சை அளித்து நோயாளிகளின் இதயத்தில் இடம் பிடித்தவர். நோயாளிகளுக்குச் சமைக்கப்படும் உணவையே தானும் உண்பார். திருமணம் செய்து கொள்ளாமல் இறுதிவரை நோயாளிகளின் சிகிச்சைக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளார். உலகில் புற்றுநோய்க்கு புதிய மருந்துகள் அல்லது புதிய மருத்துவமுறைகள் எங்குக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை தன் மருத்துவமனையில் உடனுக்குடன் அறிமுகம் செய்தவர். தான் பெற்ற விருதுகள் மூலம் கிடைத்த பணத்தைக் கூட, புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்காகவே செலவு செய்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் புற்றுநோய் தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குமுவில் இடம்பெற்றிருந்த சாந்தா, இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவராகவும் இருந்து சிறப்பான முறையில் பணியாற்றியவர்.

     உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த இவர் ஜனவரி 19, 2021 அன்று தன்னுடைய 93வது வயதில் காலமானார். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  

மூலக்கதை