மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் விறுவிறு! குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரம்

தினமலர்  தினமலர்
மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் விறுவிறு! குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரம்

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சியில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில், கிராம வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 கிராம ஊராட்சிகளும், 1200க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் உள்ளன. 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின், முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில், 74 கோடியே, 42 லட்சம் மதிப்பில், 60 கிராம ஊராட்சிகளில், 311 கிராமங்களில் உள்ள, 50 ஆயிரத்து, 953 வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.திட்டத்தில் மொத்தம், 1,072 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 60 கிராம ஊராட்சிகளில், 158 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 119 ஆழ்துளை கிணறுகள், 56 தரைமட்ட தொட்டிகள், 254 வினியோக பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, 17 கோடி மதிப்பில், 5,593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, ஊராட்சி தலைவர் ரவி கூறியதாவது:திட்டத்தில், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 4 கோடியே, 44 லட்சம் மதிப்பில், 17 ஆழ்குழாய் கிணறுகள், 10 மேல்நிலை தொட்டிகள், 9 தரைமட்ட தொட்டிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள், வெற்றிலைகாளிபாளையம், குமரபுரம், நேரு காலனி, ஏ.டி., காலனி உட்பட ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகின்றன.
திட்டத்தில், 17 ஆழ்குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டு விட்டன. ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே., நகர், பிருந்தாவன் நகர் உட்பட நான்கு இடங்களில் கீழ்நிலை தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேல்நிலைத்தொட்டி கட்டுமான பணி, ராஜீவ் காந்தி நகரில் நடந்து வருகிறது.பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டவுடன், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதுதவிர, சாலை மேம்பாடு, தெருவிளக்கு உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை