இந்தியா - பிரான்ஸ் கூட்டு பயிற்சி களமிறங்கும் ரபேல் விமானங்கள்

தினமலர்  தினமலர்
இந்தியா  பிரான்ஸ் கூட்டு பயிற்சி களமிறங்கும் ரபேல் விமானங்கள்

புதுடில்லி :இந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப் படையினருக்கு இடையே நடக்கவுள்ள கூட்டு பயிற்சியில், இந்திய விமானப் படையின், 'ரபேல், சுகோய், மிராஜ் - 2000' உள்ளிட்ட போர் விமானங்கள் களமிறக்கப்பட உள்ளன.
நம் அண்டை நாடான சீனாவுடன், கடந்த ஆண்டு முதல், எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. எல்லையில், இருதரப்பு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, நம் பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, அதிநவீன ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு
வருகின்றன.இந்நிலையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில், பிரான்ஸ் விமானப் படையுடன், கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படை ஈடுபட உள்ளது.

இன்று துவங்கும் அந்த பயிற்சியில், ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் களமிறக்கப்பட உள்ளன.இதுகுறித்து இந்திய விமானப்படை, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப் படையினருக்கு இடையே நடக்கவுள்ள கூட்டுப் பயிற்சியில், இந்திய விமானப்படை சார்பில், ரபேல், சுகோய், மிராஜ் - 2000 உள்ளிட்ட போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளன. பிரான்ஸ் தரப்பில், ரபேல், 'ஏர்பஸ் ஏ., - 330' டேங்கர் விமானம் மற்றும் 'ஏ., - 400 எம்' ரக போக்குவரத்து விமானமும், பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதில், பிரான்ஸ் விமானப் படையை சேர்ந்த, 175 அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை